புயலால் திசைமாறிச் சென்ற மீனவர்களைச் சிறைபிடித்துச் சென்ற இலங்கைக் கடற்படை

புயல் காற்றின் வேகத்தால் திசைமாறிச் சென்ற இந்திய மீனவர்கள் 20 பேரை சிறைபிடித்துச் சென்று சிறையில் அடைத்திருக்கிறது இலங்கைக் கடற்படை.

வங்கக் கடலில் உருவான ஓகி புயல் கடந்த 3 நாள்களுக்கும் மேலாக அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் எனப் பயணித்து தமிழகத்தின் தென்மாவட்டங்களை உலுக்கிவிட்டு சென்றிருக்கிறது. இந்நிலையில் கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் இன்னும் கரை திரும்பாத நிலை உள்ளது. இந்நிலையில், நாகப்பட்டினத்திலிருந்து கடந்த வியாழக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நாகை மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் 20 பேரையும் அவர்களின் 2 விசைப்படகுகளையும் இன்று காலை இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். இலங்கை பருத்தித்துறை கடல் பகுதியில் எல்லைதாண்டி வந்ததாகக் கூறி மீனவர்களைச் சிறைபிடித்த இலங்கைக் கடற்படையினர், விசாரணைக்குப் பின் அவர்களை மீன்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

புயலின் போதும் சிறை பிடிக்கப்பட்ட நாகை, காரைக்கால் மீனவர்கள்

இலங்கை மீன்துறை அதிகாரிகள் மீனவர்கள் 20 பேரையும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து மீனவர்களை இம்மாதம் 15-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வழக்கமாக மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் காற்றின் வேகத்தால் திசைமாறிச் செல்லும் நிலையில், எல்லை தாண்டுவது என்பது சகஜமான ஒன்றுதான். ஆனால், தற்போது கடலில் உருவான புயலால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதன் மூலம் மீனவர்களின் கட்டுப்பாட்டை மீறி படகுகள், இலங்கைக் கடல் பகுதிக்குள் சென்றிருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், மீனவர்கள் எல்லைதாண்டி வந்ததாகச் கூறி இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்களைச் சிறைபிடித்துச் சென்றிருப்பது வரம்பு மீறிய செயல் என மீனவர்கள் குமுறுகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!