வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (02/12/2017)

கடைசி தொடர்பு:17:09 (02/12/2017)

மிதக்கும் சுசீந்திரம்! குமரி மாவட்டத்தின் மூன்று நாள் அவல நிலவரம்

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. சுசீந்திரம் பகுதி நீரில் மிதக்கிறது. மின்சாரம் மூன்றாவது நாளாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுற்றுலா தளத்துக்கெனப் பெயர் போன மாவட்டம் குமரி.  2004-ல் ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு கன்னியாகுமரி மிகவும் பாதிக்கப்பட்டது நேற்றைய ஒகி புயலால்தான். இயற்கை எழில் கொஞ்சும் குமரியில் தற்போது எங்கும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்தத் தண்ணீர் வடிய சரியான வடிகால் வசதி இல்லாததால், வெள்ளத்தில் மூழ்கியுள்ளது குமரி மாவட்டம். ஆறு, குளம் மற்றும் ஏரி ஆகியவை நிரம்பியதால் தண்ணீர் வெளியேறி வெள்ளக்காடாகியது. குமரி வரலாற்றில் பல ஆண்டுகளுக்கு பிறகு, ஆறு மற்றும் குளம் நிரம்பி தண்ணீர் ஊருக்குள் வந்து பேரிடர் ஆனது இப்போதுதான்.

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

கடந்த 29-ம் தேதி இரவு முதலே பலத்த காற்று வீசிக்கொண்டிருக்க, காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நவம்பர் 30-ம் தேதி புயலாக மாறியது. வங்கதேசத்தால் ஒகி எனப் பெயர் சூட்டப்பட்ட இப்புயல் நவம்பர் 30-ம் தேதி குமரியைத் தாக்கியது. பலத்த மழையும் சூறாவளிக் காற்றும் குமரியைத் தடுமாற வைத்தது. புயல் காரணமாகக் குமரி மாவட்டத்தில் வீசிய சூறாவளி காற்றில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. சுமார் 3,700-க்கு மேற்பட்ட மின்கம்பங்கள் புயலின் தாக்கத்தில் சாய்ந்ததால் மாவட்டம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அன்று மாலையே புயலின் தாக்கம் குறைந்தாலும், கனமழை நீடித்துக்கொண்டே இருந்தது. இதனால் ஆறு மற்றும் குளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்தது. மழையின் காரணமாக மாவட்டத்தின் பல இடங்கள் பாதிக்கப்பட்டாலும், அதிக பாதிப்புக்கு உள்ளானது சுசீந்திரம்தான்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய கோயில் ஸ்தலமாக விளங்கும் சுசீந்திரம், ஒகி புயலால் வெள்ளம் சூழ்ந்து முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. சுசீ்ந்திரத்துக்கு முன் பெருக்கெடுத்து ஓடும் பழையாற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளைத் தண்ணீர் சூழ்ந்து கொண்டது. மக்களைப் படகு மூலமாக ஆபத்தான பகுதியிலிருந்து மீட்டு வருகின்றன மீட்புக் குழுவினர். பழையாற்று வெள்ளம் ஒழுகினசேரி பகுதியில் பாய்ந்து நாகர்கோவிலின் முக்கிய சாலையை மூழ்கடித்தது. மேலும், பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலினுள் வெள்ளம் புகுந்து தெப்ப குளமாகக் காட்சியளித்தது.

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

சுசீந்திரம் மட்டுமன்றி குமரி மாவட்டத்தில் மீனாட்சி கார்டன், ஊட்டுவாழ்மடம், கரியமாணிக்கபுரம், அக்கரை, தேரூர், திருப்பதிசாரம் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. கனமழையால் அநேக மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. மழைத் தண்ணீர் மற்றும் ஆற்று வெள்ளம் ஊரைச் சூழ்ந்துள்ளதால் மின்கம்பங்கள் சரி செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மூன்று நாள்களாக மின்சாரமின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். இது குறித்த ஆய்வுக் கூடம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கமணி, அனைத்து மின்கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்ஃபார்மர்கள் சரி செய்யப்பட்டவுடன் இன்னும் 2 அல்லது 3 நாள்களில் மின்சாரம் வழங்கப்படுவதாகவும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களைத் தங்க வைப்பதற்கு 18 முகாம்களும் அமைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

வெள்ளத்தில் தவித்துக்கொண்டிருக்கும் மக்கள் ஒரு சிலரிடம் கேட்டபோது, ``தண்ணீர் உள்ள வந்ததைவிட மின்சாரம் இல்லாமல் போனது தான் பெறும் பிரச்னையா இருக்கு. தண்ணீர் வீட்டுக்குள் வந்ததால் எங்கள் வீட்டின் பொருள்கள் எல்லாம் வீணாவிட்டு. சென்னையில வந்ததைவிட இது பாதிப்பானு எல்லாரும் கேட்குறாங்க. எங்களுக்கு இது பாதிப்புதான். சீக்கிரமா ஏதாவது நடவடிக்கை எடுத்தா ரொம்ப நல்லா இருக்கும்" என வேதனை தெரிவித்தனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க