வெளியிடப்பட்ட நேரம்: 20:09 (02/12/2017)

கடைசி தொடர்பு:20:09 (02/12/2017)

புயலால் முறிந்து விழுந்த ரப்பர் மரங்கள்..! வேதனையில் விவசாயிகள்

கன்னியாகுமரியில் ஒகி புயலின் காரணமாக ஆயிரக்கணக்கான ரப்பர் மற்றும் தேக்கு மரங்கள் முறிந்துவிழுந்து விவசாயிகளுக்குப் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 


கன்னியாகுமரி மாவட்டக் கடல் பகுதியில் மையம்கொண்டிருந்த ஒகி புயலால் மாவட்டம் முழுவதும் சூறைக்காற்று வீசியது, மிகப் பலத்த மழை பெய்தது. இதனால் நாகர்கோவில் நகர் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. மாவட்டத்தின் பிற பகுதிகளில், குறிப்பாக, திருவட்டார், பத்மநாபபுரம், சரள்விளை உள்ளிட்ட இடங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேக்கு மற்றும் ரப்பர் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. 

மாவட்டம் முழுவதும் ரப்பர் மரங்கள் மட்டும் 25 ஆயிரத்துக்கும் மேல் முறிந்து விழுந்துள்ளன. மரங்கள் வளர்ந்து பால் எடுக்கும் நிலையில் முறிந்துள்ளதால், விவசாயிகளுக்கு கோடிக்கணக்கில் நட்டம் ஏற்பட்டுள்ளது. மழையால் சாலைகளிலும் அரிப்பு ஏற்பட்டுள்ளது. சேத மதிப்பு சரியாகக் கணக்கிடப்பட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.