`ஒரு வாரமா எங்க வியாபாரமே போச்சு': கோவை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பரிதாபங்கள்!

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக, கோவையில் தடபுடலாக ஏற்பாடுகளைச் செய்து வருகிறது தமிழக அரசு. ஒகி புயல், ரகு மரணம் இவை எதையுமே கண்டுகொள்ளாமல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்துவதில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. ஒட்டு மொத்த அமைச்சர்களும் கோவையில் அட்டெண்டன்ஸ் போடத் தயாராகி வருகின்றனர்.

வ.உ.சி மைதனாம்

பழைய படம்

ரகு குடும்பத்தை மட்டுமல்ல, விழா நடக்கும் வ.உ.சி மைதானம் அருகே உள்ள ஏராளமான சிறு வியாபாரிகளின் வயிற்றிலும் அடித்துள்ளது தமிழக அரசு. வ.உ.சி மைதானத்தை ஒட்டியுள்ள சாலையில், பானிபூரிக் கடை, ராட்டினம், குல்ஃபி, பெட்டிக்கடை, பூக்கடை, கையேந்தி பவன், ஊசிப்பாசி கடை என 50-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கும்.

வ.உ.சி மைதானம்

பழைய படம்

தற்போது, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அரசு துறைகளின் கண்காட்சி ஸ்டால்களை அமைக்க, தமிழக அரசு தேர்ந்தெடுத்தது இவர்கள் வியாபாரம் செய்யும் இடம்தான். இதன் காரணமாக, கடந்த ஒரு வாரமாக அங்கு எந்தக் கடையும் இல்லை. இங்கு வியாபாரம் நடத்தி வந்த வியாபாரிகள் கடந்த ஒரு வாரமாக வியாபாரம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அங்கு வியாபாரம் நடத்தி வந்த சிலரிடம் பேசினோம், ``ஒரு வாரத்துக்கு முன்னாடியே, கார்ப்பரேஷன் அதிகாரங்க, போலீஸ்காரங்க வந்து, ஒரு வாரத்துக்கு கடைபோடக் கூடாதுனு சொல்லிட்டு போய்ட்டாங்க. அதனால, நாங்க யாருமே ஒரு வாரமா கடை போடல. வேற இடத்துல கடைபோட முயற்சி பண்ணோம். ஆனா, அது சரி வரல. மழையும் வந்து கெடுத்துடுச்சு" என்றனர் சோகத்துடன்.

ஸ்டால்கள்

இந்நிலையில், நாளை வ.உ.சி சுற்றுவட்டாரத்தில் இருக்கும் அனைத்து சில்லறை கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒருநாள்தான் அவர்களுக்கு நல்ல வியாபாரம் நடக்கும். அந்த வியாபாரத்திலும் இவர்கள் கல்லைப் போட்டுவிட்டனர். நாளை நடக்கும் விழாவில் கோடிக்கணக்கான மதிப்பில் நலத்திட்டங்களை அறிவித்து, அம்மாவின் ஆட்சி அதைச் செய்தது, இதைச் செய்தது என்று பெருமை பீத்திக்கொள்ளும் தமிழக அரசே, சிறு வியாபாரிகள் வயிற்றில் அடித்த பாவத்தை யார் ஏற்றுக் கொள்வது?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!