வெளியிடப்பட்ட நேரம்: 17:48 (02/12/2017)

கடைசி தொடர்பு:18:08 (02/12/2017)

கடலில் தவிக்கும் 2,000 மீனவர்களை இந்தியக் கடற்படை காப்பாற்ற வேண்டும்..! மீனவர்கள் சங்கம் வேண்டுகோள்

நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் 2,000 மீனவர்களை இந்தியக் கடற்படையினர் விரைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று அகில இந்திய பாரம்பர்ய மீனவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மகேஷ் தெரிவித்துள்ளார். 


இரு தினங்களுக்கு முன்னர் கடந்த ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், புயலுக்கு முன்னதாகக் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் நடுக்கடலில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுவருகிறது. இதுகுறித்து அகில இந்திய பாரம்பர்ய மீனவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மகேஷிடம் பேசும்போது, `கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 8 கிராமத்தைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் சிக்கியுள்ளனர்.

அவர்கள் ஏற்கெனவே 60 கி.மீ வேகத்துக்கு வீசிய காற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இன்னமும் புயல் மையம் கொண்டுள்ளதால், அவர்கள் மீன் பிடிக்கும் பகுதியில் 120 கி.மீ வேகத்துக்குப் புயல் காற்று தாக்கவுள்ளது. இந்திய கடற்படை அவர்களை விரைந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். புயல் தாக்குவதற்கு முன்னதாக அவர்களைக் காப்பாற்றினால்தான் காப்பாற்ற முடியும். இல்லையேல் அவர்கள் பிழைப்பது கஷ்டம். மீனவர்களைக் காப்பாற்ற மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியக் கடற்படை விரைந்து செயல்பட்டால் மட்டுமே மீனவர்களைக் காப்பாற்ற முடியும்' என்று தெரிவித்தார்.