`11 கப்பல்கள் மூலம் மீனவர்களை மீட்கும் பணி தீவிரம்’ - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

கன்னியாகுமரி கடல்பகுதியில் உருவான ‘ஒகி’ புயலால் மாயமான மீனவர்களை, 3 பெரிய கப்பல் உட்பட 11 கப்பல்கள் மூலம் தேடும்பணி போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

minister jayakumar

கன்னியாகுமரியில் ஒகி புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் ஜெயக்குமார் தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``ஒகி புயலின் சீற்றத்தால் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் காணாமல் போனதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மீனவர்களை மீட்கும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கிடைத்த தகவலின் அடிப்படையில், இதுவரை எடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் மூலம் 837 மீனவர்கள், 71 மீன்பிடி படகுகளில் குஜராத், கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு உள்ளிட்ட கடல் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பாகக் கரை ஒதுங்கியுள்ளனர். அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக அந்தந்த மாநில அரசுகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், 33 படகுகளில் மீன்பிடிக்கச் சென்று கடலில் சிக்கியுள்ள 85 மீனவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த மீனவர்கள் தங்கு கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மீனவர்களை மீட்கும் பணியில் கடலோர காவல்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ் யமுனா, ஐ.என்.எஸ். சாகர்ஹரி, ஐ.என்.எஸ் நெரிக்பிசிக் மற்றும் ராஜாளி என்ற போர்க்கப்பல் உள்ளிட்ட 11 கப்பல்கள் மற்றும் 2 ஹெலிகாப்டர்கள்  ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மீனவர்களை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் அவர்களுடைய குடும்பத்தினர் யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. மேலும், இந்தப் புயலின் தாக்கத்தால் சேதமடைந்த படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் ஆகியவை குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. அவை முழுமையாகக் கிடைத்த பின் அரசின் நிவாரண உதவி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!