இடிந்துவிழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி! கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் புதூர் ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இடிந்துவிழும் நிலையில் இருப்பதால், அந்தக் கிராமமே உயிர்பயத்தில் இருக்கிறது. 

 

இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் லதாவிடம் புகார் கொடுக்க வந்திருந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த செல்வத்திடம் பேசினோம். “சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் புதூர் ஆதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் சுமார் இருநூறு குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தத் தொட்டி கட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில் பராமரிப்பு இல்லாததால், அதன் நான்கு தூண்களும் சிதைந்து காணப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்துடனே இருக்கிறார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்த நீர்தேக்கதொட்டி அருகே ஓய்வெடுப்பதும், விளையாடுவதுமாக இருக்கிறார்கள். சுமார் இருபது பேர் சேர்ந்து ஊர் சார்பாக மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் நாளில் புகார் கொடுத்தோம். உடனே கோட்டாட்சியர் சுந்தமூர்த்தி நேரில் வந்து பார்வையிட்டார். அந்த இடத்தில் இருந்தபடியே வட்டாரவளர்ச்சி அதிகாரிக்கு போன் போட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இருப்பினும், எந்த அதிகாரிகளும் அந்தத் தொட்டியை வந்து பார்க்கவில்லை. எங்களை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அரசு கட்டடங்கள் தற்போதைய நிலை என்ன என்பதை, பொறையார் அரசுப் போக்குவரத்துக் கட்டடம்  இடிந்து விழுந்த சம்பவம் நமக்கு உணர்த்தியது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் புகார் மனு கொடுத்திருக்கிறோம். ஏதாவது அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொட்டியில் தண்ணீர் ஏற்றும் போதெல்லாம் மனதிற்குள் ஒரு அச்ச உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஏதாவது நடக்கக்கூடாத விபத்து நடந்துபோனால் முதலில் பாதிக்கப்படுவது நாங்கள்தான். பிறகு அரசு அதிகாரிகள் வந்து முகாமிடுவதும், நிவாரணம் கொடுப்பதும் சடங்காக மாறிவிடும். அப்படியொரு சம்பவம் எங்கள் ஊரில் நடந்து விடக் கூடாது என்பதற்காக வருமுன் காத்துக்கொள்ள புகார் கொடுத்தால் எங்களைக் கண்டுகொள்ள யாருமில்லை” என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!