வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (02/12/2017)

கடைசி தொடர்பு:19:51 (02/12/2017)

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக நாய்களைப் பிடிக்கும் கோவை மாநகராட்சி!

கோவை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாநகராட்சி நிர்வாகம் தெரு நாய்களைப் பிடித்து வருகிறது.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழ◌ா

ஆளுங்கட்சி நடத்தும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவால் கோவை மக்கள் கடும் அவஸ்தயை அனுபவித்து வருகின்றனர். நகர் முழுவதும் பேனர் வைத்து போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்வது, போக்குவரத்து வழித்தடங்களை மாற்றியமைப்பது எனத் தொடர்ந்து அட்ராசிட்டி செய்து வருகின்றனர். இந்நிலையில், விழா நடக்கும் வ.உ.சி மைதானத்துக்குச் சென்றோம். கோவை மட்டுமல்லாமல் மற்ற நகரங்களிலிருந்தும் போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். விழாவை முன்னிட்டு, மேடை அருகே தார்ச்சாலை அமைப்பது, பிரமாண்ட வரவேற்பு பந்தல்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

விழா மேடை அமைப்பது, கட்சிக்கொடி கட்டுவது, பேனர் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக ஏராளமான தொழிலாளர்கள் வெளியூர்களிலிருந்து கோவைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். விழாப் பந்தல் அமைப்பதற்காக, மரத்தின் கிளையை வெட்டியுள்ளனர். அங்கிருந்த சிறு வியாபாரிகள் விரட்டப்பட்டுள்ளனர். மேலும், குடிசை மாற்று வாரியத்தின் சார்பில், அந்தத் துறையின் பெருமை பேசுவதற்காக, தற்காலிக மாடல் வீடு கட்டப்பட்டுள்ளது.

தெரு நாய்கள்

அதிகாரிகள், தொழிலாளர்கள் அங்கும், இங்கும் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார்கள். கலெக்டர், கார்ப்பரேஷன் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் வ.உ.சி மைதானத்தை பார்வையிட்டனர். இதுத்தவிர, வ.உ.சி மைதானத்தில் இருக்கும் தெருநாய்களைப் பிடிக்க, மாநகராட்சியின் நாய் பிடிக்கும் வண்டி வந்திருந்தது. விழாவின்போது, தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காக நாய்களைப் பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு குட்டி நாய் உள்பட மூன்று நாய்களைப் பிடித்துச் சென்றனர். இதேபோல், அந்தப் பகுதியில் உள்ள நாய்களைப் பிடிக்கவும் கோவை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாம்.