வெளியிடப்பட்ட நேரம்: 22:01 (02/12/2017)

கடைசி தொடர்பு:22:01 (02/12/2017)

'நிகர்நிலை கல்வி நிறுவனங்கள் இனி பல்கலைக்கழகங்கள் இல்லை!’

தனியார் நிகர்நிலை கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் என்று பெயரைப் பயன்படுத்துவதற்குப் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) தடை விதித்திருந்திருந்தது. இந்தத் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 'உயர்கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படாமலேயே சிறந்த கல்வி நிறுவனமாகத் திகழ முடியும். பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்த தடை உத்தரவு சரியானதே' என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. 

நிகர்நிலை

மத்திய அரசு அல்லது மாநில அரசின் சட்ட வரைவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்கள் மட்டுமே பல்கலைக்கழகங்கள். மற்ற கல்வி நிறுவனங்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மட்டுமே. கல்வி நிறுவனத்தின் தரத்தின் அடிப்படையில் நிகர்நிலை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வி நிறுவனங்கள் நிகர்நிலை என்பதைக் குறிப்பிடாமல் பல்கலைக்கழகம் என்று கல்வி நிறுவனத்தின் பெயருக்குப் பின்னால் சேர்த்துக்கொள்ளக் கூடாது என்று பல்கலைக்கழக மானியக்குழு தடை விதித்தது. 

பல்கலைக்கழகங்கள் பெயர் மாற்றத்துக்குத் தடை கோரி தனியார் கல்வி நிறுவனங்கள் உச்சநீதிமன்றம் வழக்குத் தொடுத்தன. வழக்கின் தீர்ப்பில் 'பல்கலைக்கழக மானியக்குழுவின் தடை சரியானதே' என்று தீர்ப்பு வழங்கியதோடு 'பல்கலைக்கழக மானியக்குழு மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கும் கல்வி நிறுவனங்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் என்று அழைக்கப்படுதில் தவறில்லை' என்று சொல்லியிருக்கிறது உச்சநீதிமன்றம். இந்தத் தீர்ப்பு, கல்வி நிறுவனத்தின் பெயருக்குப் பின்னால் நிகர்நிலை என்று சேர்க்காமல் பல்கலைக்கழகம் என்று விளம்பரம் செய்த கல்வி நிறுவனங்களுக்குப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.