வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (02/12/2017)

கடைசி தொடர்பு:22:20 (02/12/2017)

’தஷ்வந்த் யாரையும் கொலைசெய்யத் தயங்க மாட்டான்!’ - அச்சத்தில் சிறுமி ஹாசினியின் பெற்றோர்

சிறுமி ஹாசினியின் கொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் வந்த தஷ்வந்த், அவரது தாயைக் கொலை செய்துவிட்டு தலைமறைவானதாகப் புகார் எழுந்துள்ளது. 


சென்னை முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹாசினி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த், மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படவே, அவர் அண்மையில் ஜாமீனில் வெளிவந்தார். ஆனால், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சிறுமி ஹாசினியின் பெற்றோரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தநிலையில், குன்றத்தூரில் உள்ள தனது வீட்டில் தாய் சரளாவைக் கொலை செய்துவிட்டு, நகைகளுடன் தஷ்வந்த் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரது தந்தை சேகர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்தநிலையில், ஹாசினியின் பெற்றோரைத் தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் சிறுமி ஹாசினியின் தந்தை பாபு கூறுகையில், ‘சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த தஷ்வந்த் போன்றவர்கள் சுதந்திரமாக நடமாடுவது, சமூகத்தில் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும். அவரைப் போன்றவர்கள் யாரையும் கொலைசெய்யத் தயங்க மாட்டார்கள் என்று சமீபத்தில் விகடனுக்கு நான் பேட்டியளித்திருந்தேன். அதை மெய்ப்பிக்கும் வகையில், தஷ்வந்த் அவரது தாயையே கொலை செய்துவிட்டு தப்பியிருக்கிறார். இதனால், எனது குடும்பத்தினர் அச்சத்தில் இருக்கிறார்கள். நாங்கள் இருக்கும்  இடம் இப்போது வெளியில் தெரிந்துவிட்டது. எங்கள் அச்சத்தைப் போக்கும் வகையில் இனியும் தாமதிக்காமல் போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுத்து தஷ்வந்தைக் கைது செய்ய வேண்டும். அவருக்கு தூக்குதண்டனையை நீதிமன்றம் அளிக்க வேண்டும். ஹாசினிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். ஹாசினியைப் போல் மற்ற குழந்தைகளும் பாதிக்கப்படாமல் இருக்க தஷ்வந்த் போன்றவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும். இப்போ அம்மாவையே கொலைசெய்துவிட்டு தப்பியவன், இன்னும் எத்தனை பேரை கொலை செய்யப் போகிறானோ. தமிழக போலீஸாரும், நீதிமன்றமும் எங்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும். தன் பையன் இப்படியொரு குற்றத்தைப் பண்ணிட்டானேன்னு நினைச்சு, அவரோட அம்மா பேசாம இருந்திருக்கலாம். நம்ம அம்மாவே நம்மை குற்றவாளியா பார்க்குறாங்களேன்னு நினைச்சு, தாயை இவர் கொலை பண்ணிருக்கலாம். பாவம் அந்தத் தாய்க்கு தெரிஞ்சிருக்கு, நம்ம பையன் பண்ணிணது தப்புன்னு.  இந்த நேரத்துல குற்றவாளியோட அம்மாவுக்காகவும் நாங்க வருத்தப்படுறோம்’ என்றார்.