வெளியிடப்பட்ட நேரம்: 22:10 (02/12/2017)

கடைசி தொடர்பு:22:10 (02/12/2017)

''அரசியலுக்கு நடிகர்கள் தேவையில்லை..!" ஆர்.கே.நகர் வேட்பாளரை அறிவித்த தமிழிசை தடாலடி

அரசியலுக்கு நடிகர்கள் தேவையில்லை; சினிமா டிக்கெட் வேறு; அரசியல் டிக்கெட் வேறு. திரைத்துறை பிரச்னைகளை முதலில் தீர்க்கட்டும். அதன்பிறகு விஷால் அரசியலுக்கு வரலாம்'' என்று ஆர்.கே.நகர் பா.ஜ.க வேட்பாளராக கரு.நாகராஜனை அறிவித்தபின் அக்கட்சியின்  மாநிலத்  தலைவர் தமிழிசை கூறினார்.

கரு நாகராஜன்  தமிழிசை

ஆர்.கே நகரில்  இடைத்தேர்தலில் பா.ஜ.க சார்பில் அக்கட்சியின்  மாநில செயலாளர் கரு. நாகராஜன் போட்டியிடுகிறார். இதை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்த பா.ஜ.க மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை கூறுகையில், ''கரு.நாகராஜன் நிச்சயம் வெற்றி பெறுவார். அவருக்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள். பாரத பிரதமர் மோடியின் சாதனைகளை முன்னிறுத்தி மிக கடுமையாக உழைத்து வெற்றி பெற செய்வோம். இடைத்தேர்தல் என்றாலே முடிவுகள் இப்படித்தான் இருக்கும் என்பதை மாற்றிக் காட்டுவோம். திருப்புமுனை தேர்தலாக அமையும். அப்படியொரு முன்னுதாரணத் தேர்தலாக இருக்க வேண்டும் என்று உழைப்போம். 

நடிகர்கள் போட்டிபோட்டுக்கொண்டு அரசியலுக்கு வருவது சுயவிளம்பரத்துக்குத்தான். சேவைசெய்ய அல்ல. சினிமா டிக்கெட் வேறு; அரசியல் டிக்கெட் வேறு. நடிகர் சங்க தேர்தல், தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலோடு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலை பார்க்கக் கூடாது. இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. அதைப் புரிந்துகொள்ள வேண்டும். அரசியலுக்கு நடிகர்கள் தேவையில்லை. திரைத்துறை பிரச்னைகளை முதலில் தீர்க்கட்டும். பிறகு அரசியலுக்கு வரலாம். அரசியலை பார்த்துக்கொள்ள அரசியல் தலைவர்களுடன் நாங்கள் இருக்கிறோம். நடிகர்கள் தேவையில்லை'' என்றார்.

கடந்த முறை ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன் போட்டியிட்டார். தீவிரமாக தேர்தல் பிரசாரங்களிலும் ஈடுபட்டார்.  இந்த முறை போட்டியிட அவர் விருப்பம் தெரிவிக்காததால் கட்சியின் மாநில செயலாளர் கரு.நாகராஜன் நிறுத்தப்பட்டுள்ளார். இவர், சில வருடங்களுக்கு முன்பு, நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க-வில் சேர்ந்தவர் ஆவார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க