வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (02/12/2017)

கடைசி தொடர்பு:23:30 (02/12/2017)

உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர்... பேருந்தில் விளம்பர போஸ்டர்... அத்துமீறும் ஆளுங்கட்சி...!

பேனர் வைப்பதில் நீதிமன்றம் சொன்ன உத்தரவுகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, ஓர் உயிரை காவு வாங்கிவிட்டு, அதைப்பற்றி கொஞ்சம்கூட கவலைப்படாமல், பேனர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டது தமிழக அரசு. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு ஒரு நாளே உள்ள நிலையில், இன்றைய தினம் கோவையை தங்களது விதி மீறல்களால், திக்கு முக்காட செய்து விட்டனர் ஆளுங்கட்சியினர்.

பேனர்

மக்கள் நடக்கும் பாதையில் பேனர்களை வைப்பது, போக்குவரத்தை மாற்றியமைப்பது என்று தொடர்ந்து விதி மீறல்களில் ஈடுபட்டனர். குறிப்பாக, மின் கம்பங்கள், தனியார் காம்பவுண்ட் சுவர்கள் உள்ளிட்ட இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டன. அதேபோல, விமானநிலையம் எதிரே 50 உயரத்தில் ஜெயலலிதா கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.

உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர், கட் அவுட் வைக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டு சில நாள்களே கடந்துள்ளன.  ஆனால், கோவை விமான நிலையம் அருகே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இருக்கும் பேனர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பேருந்துகளில் விளம்பரம் ஒட்டக்கூடாது என்று சொன்ன தமிழக அரசு, இந்த விழாவுக்காக, கோவை மாநகர அரசுப் பேருந்துகளில் விளம்பரம் ஒட்டியுள்ளது.

விளம்பரம்

 

இதுகுறித்து சமூக ஆர்வலர் தியாகராஜன் கூறுகையில், நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறிதான், பெரும்பாலான இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, அவிநாசி சாலையில் விமான நிலையம் – வ.உ.சி வலது புறம் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் 80 சதவிகிதம், மக்கள் பயன்படுத்தும் இடங்களில்தான் வைக்கப்பட்டுள்ளன. அரசு விழாவை, கட்சி விழாப்போல நடத்தி வருகின்றனர்.பல இடங்களில் போலீஸ் பாதுகாப்புடனே, தனியார் காம்பவுண்ட் சுவர்களில் பேனர்கள் கட்டப்பட்டன. சில பகுதிகளில் மக்கள் நடந்து செல்லும் டைல்ஸ் கற்களை உடைத்தும் பேனர் வைக்கப்பட்டது என்றார்.