வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (03/12/2017)

கடைசி தொடர்பு:00:30 (03/12/2017)

ஒருபுறம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்...மறுபுறம் எம்.ஜி.ஆர் திறந்து வைத்த பள்ளி திண்டாட்டம்!

எம்.ஜி.ஆர் திறந்து வைத்த பள்ளி

"எம்.ஜி.ஆரின் புகழை மக்களிடம் எடுத்துச்செல்வதற்கும், எம்.ஜி.ஆரின் பெயரில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவருவதற்கும்தான் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களை நடத்திவருகிறோம்" என்று   சொன்ன அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொந்த  தொகுதியில் எம்.ஜி.ஆர் திறந்து வைத்த ஓர் உண்டு உறைவிடப்பள்ளி சிதிலமடைந்து கேட்பாரற்று கிடக்கிறது.

கோவையிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது சாடிவயல். அதன் அருகே உள்ள சீங்கப்பதி என்கிற கிராமத்தில்,   1983-ம் ஆண்டு மலைவாழ் மக்களின் பிள்ளைகளின் படிப்புக்காக எம்.ஜி.ஆர் ஓர் உண்டு உறைவிடப்பள்ளியை திறந்து வைத்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்புவரை சிறப்பாக செயல்பட்டு வந்த அந்த பள்ளி இப்போது சிதலமடைந்து கேட்பாரற்று கிடக்கிறது. அதுவும் எம்.ஜி.ஆர் பெயர்பொறித்த  கல்வெட்டு வைக்கப்பட்டிருக்கும் கட்டிடம் மிகமிக மோசமான நிலையில் இருக்கிறது. பள்ளியின் கழிவறைகளில் புதர்கள் மண்டி பாம்புகள், விஷப் பூச்சிகளின் குடியிருப்பாக மாறியிருக்கிறது. கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை கோலாகலமாக  கொண்டாட தடபுடல் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்  அமைச்சர் வேலுமணி. ஆனால், அவர் தொகுதியான தொண்டாமுத்தூருக்கு உட்பட்ட பகுதியில் எம்.ஜி.ஆர் திறந்து வைத்த பள்ளிக்கூடம் மோசமான நிலையில் இருப்பதை  கண்டுகொள்ளவில்லை என்று கொதிக்கிறார்கள் அந்த ஊர் மக்கள்.

எம்.ஜி.ஆர் திறந்து வைத்த பள்ளி

பள்ளிக்கூடத்தின் அவலம் குறித்து அந்த ஊர் மக்கள் சிலரிடம் பேசினோம், "இது உண்டு உறைவிடப்பள்ளி.  சாடிவயல், பொட்டபதி, வெள்ளபதி, சர்கார் போரத்தி, ஜாகிரி போரத்தி,  கல்கொத்திபதி போன்ற மலைகிராமத்து பிள்ளைங்களுக்கு இது ஒண்ணுதான் பள்ளிக்கூடம்.
எங்க பிள்ளைங்களும் படிச்சி முன்னேறனும்'ங்கிற நல்ல எண்ணத்துல எம்.ஜி.ஆர் அய்யா இந்த பள்ளிக்கூடத்தை திறந்து வச்சாங்க. சில வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும்  நூறுக்கும் மேற்பட்ட  பிள்ளைகள் இந்த பள்ளிக்கூடத்துல  தங்கி படிச்சிகிட்டு இருந்தாங்க.  ஆனால், இப்போ நிலைமை தலைகீழா மாறிடுச்சி. மூணு டீச்சருங்க சும்மா கடமைக்கு வந்துட்டு போறாங்க. பள்ளிக்கூடம் பராமரிப்பு இல்லாம பாழடைஞ்சு கிடைக்கும். இப்போ பிள்ளங்க யாரும் தங்கிறது இல்ல.

எந்த அதிகாரிங்களும் இங்க வர்றதும் இல்ல. போன வருஷம் ஏதோ ஒரு அமைப்பு ஒரேஒரு கட்டடத்துக்கு மட்டும் பெயிண்ட் அடிச்சு கொடுத்தாங்க அதுமட்டும் கொஞ்சம் பளபளப்பா இருக்கும். அதுக்கும் போன வருஷம் அமைச்சர் வேலுமணி இங்க ஒரு ஃபங்க்‌ஷனுக்காக வந்தார். அப்போகூட இந்த ஸ்கூலோட நிலைமை அவர் கண்ணுக்கு தெரியல. சில நாட்களுக்கு முன்னால கூட இந்த வழியாதான் கார்ல போனார். அப்பவும் அவர் கண்ணுக்கு இது தெரியல. இப்போ என்னடான்னா எம்.ஜி.ஆருக்கு  விழா எடுக்குறோம்னு கோயம்புத்தூர் முழுக்க ப்ளெக்ஸ் பேனர், கட்-அவுட்'னு   வீணா செலவழிக்கிற காசுக்கு இதுமாதிரி எம்.ஜி.ஆர் கையால திறந்து வச்சு, இப்போ மோசமான நிலைமையில இருக்க பள்ளிக்கூடங்களை சரி பண்ணாலே போதும். இந்த தலைமுறை பசங்க மனசுல எம்.ஜி.ஆர் ஆழமா பதிஞ்சிடுவார். அதைவிடுட்டு இவுங்க ப்ளெக்ஸ் வச்சிகிட்டு அலையுறாங்க" என்று வெறுப்பும்  அலுப்புமாக பேசுகிறார்கள்"

மக்களுக்கு தெரியுது… அமைச்சருக்கு தெரியலையே!

நீங்க எப்படி பீல் பண்றீங்க