வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (03/12/2017)

கடைசி தொடர்பு:02:00 (03/12/2017)

குமரி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி 25 பசுக்கள் உயிரிழப்பு!

குமரி மாவட்டத்தில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி கோசாலையில் பராமரிக்கப்பட்ட 25 பசுக்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

பசுக்கள் உயிரிழப்பு

வங்கக் கடலில் உருவான ஒகி புயலின் காரணமாக குமரி மாவட்டத்தில் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பின. அத்துடன், 4000-க்கும் அதிகமான மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் மாவட்டம் முழுவதும் 3-வது நாளாக மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஆயிரக்கணக்கான மரங்கள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக சுசீந்தரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தாணுமலைய சுவாமி கோயில் வெள்ளத்தால் சூழப்பட்டது. கோயிலின் உள்ளே வெள்ள நீர் புகுந்ததால் பக்தர்களால் வெளியேற முடியாத நிலைமை உருவானது. அப்பகுதி மக்களும் பேரிடர் மீட்புக் குழுவினரும் ஒருங்கிணைந்து பக்தர்களை பத்திரமாக வெளியேற்றினார்கள். திருப்பதிச்சாரம் தேரூர் சானலில் வெள்ளப் பெருக்கு அதிகமாகி தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. தாழ்வான பகுதிகளில் குடியிருந்த மக்களால் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலைமை உருவானது அவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.  

கோசாலையைச் சூழ்ந்த வெள்ளம்

சுசீந்திரம் அருகே உதிரப்பட்டி பகுதியில் கோசாலை அமைந்துள்ளது. அங்கு நூற்றுக்கும் அதிகமான பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. குமரியை உலுக்கிய ஒகி புயலால் பெய்த மழையால் கோசாலையை வெள்ளம் சூழ்ந்தது. அருகில் இருந்த சானலில் இருந்து வெளியேறிய வெள்ளம் கோசாலைக்குள் புகுந்தது,. இதனால் அங்கிருந்த பசுக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியதில் 25 பசுக்கள் உயிரிழந்தன. தண்ணீரில் தத்தளித்த மேலும் பல பசுக்களை அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க