வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (03/12/2017)

கடைசி தொடர்பு:02:30 (03/12/2017)

''வெள்ளத்தால் தீவான குமரி மாவட்டம்..!''  மீட்பு பணிகளை தீவிரப்படுத்த அன்புமணி கோரிக்கை

ஒகி புயலால் தென் மாவட்டங்கள் மிகக்கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டம் துண்டிக்கப்பட்டு தனித்தீவாக மாறியுள்ளது. புயல் மற்றும் மழையால் தென் தமிழகத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை சீரமைப்பதில் அரசு எந்திரம் போதிய வேகம் காட்டாதது கண்டிக்கத்தக்கது. மீட்பு பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று என்று பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

அன்புமணி


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 'ஒகி புயல்விளைவாக வீசிய சூறைக்காற்றும், பெய்த  மழையும் தென் மாவட்டங்களை சின்னாபின்னமாக்கியுள்ளன. இந்தியாவின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரி தான் இந்த புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர் மழை காரணமாக பழையாற்றில் வெள்ளம் ஏற்பட்டு பல ஊர்களைத் துண்டித்துள்ளது. மழையால் ஏற்பட்ட வெள்ளமும் ஊர்களைச் சுற்றி வளைத்துள்ளது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.

குமரி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் விழுந்ததாலும், வெள்ளத்தாலும் சாலைப்போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.  4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் மின்சாரம் முற்றிலுமாக தடைபட்டுள்ளது. அதன் தொடர் விளைவாக தகவல் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. ஊர் முழுவதும் வெள்ளநீர் ஓடும் நிலையில் வீடுகளில் குடிக்கவும், குளிக்கவும் தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. கடந்த காலங்களை ஒப்பிடும்போது இப்போது பெய்துள்ள மழையின் அளவு மிகவும் குறைவு தான் என்றாலும் கூட, அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்குக் காரணம் மழை நீர் வெளியேறுவதற்கான இயற்கை கால்வாய்கள் தூர்வாரப்படாததுதான். குமரி மாவட்டத்தில் உள்ள பழையாறு மிகப்பெரிய வடிகாலாக விளங்கி வந்தது. ஆனால், பழையாறு பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் அளவுக்கு அதிகமான தண்ணீரைத் தாங்க முடியாமல் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட காரணமாக மாறியுள்ளது. தீமைகளை நன்மைகளாகவும் சாபங்களை வரங்களாகவும் மாற்றுவது தான் மக்கள் நலன் காக்கும் அரசின் கடமை. ஆனால், தமிழகத்தில் அமைந்துள்ள ஊழல் பினாமி அரசு, வெள்ளத்தடுப்புக்கான அடிப்படை முன்னெச்சரிக்கை பணிகளைக் கூட செய்யாமல் நன்மைகளை தீமைகளாகவும், வரங்களை சாபமாகவும் மாற்றி வருகிறது.

kumari


கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை ஓரளவு குறைந்துள்ள நிலையில் மரங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைக்கவும், சாய்ந்து விழுந்த மின்கம்பங்களை தூக்கி நிறுத்தி மின் வினியோகத்தைத் தொடங்கவும் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், அதற்கான முயற்சிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. தென் மாவட்டங்களில் உள்ள பல்வேறு துறைகளின் பணியாளர்களும் தங்களால் முயன்றவரை சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரை தலைமையிலான படையினர் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்டல், சாய்ந்த மரங்களை அகற்றுதல் போன்ற பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். ஆனாலும் புயல், வெள்ள பாதிப்புகளின் தீவிரத்துடன் ஒப்பிடும் போது மீட்புப் பணிகளின் வேகம் போதாது.

புயல், வெள்ள பாதிப்புகளை சரி செய்ய அமைச்சர் உதயகுமார் மற்றும் அதிகாரிகளும், மாநில பேரிடர் மீட்புக்குழுவும் விரைந்திருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கும் போதிலும், கள நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மீட்புப் பணிகள் உடனடியாக விரைவுபடுத்தப்படாவிட்டால், பல காரணங்களால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டக்கூடாது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் தேவைப்பட்டால் மத்திய அரசிடமிருந்தும் மீட்புக் குழுவினரை வரவழைத்து தென் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்'' என்று வலியுறுத்தி உள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க