வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (03/12/2017)

கடைசி தொடர்பு:03:00 (03/12/2017)

நெல்லையில் மழை நீர் வெளியேற்றப்பட்டதால் மீண்டும் செயல்படத் தொடங்கிய ஆரம்ப சுகாதார நிலையம்!

நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளே தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். அங்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் மீண்டும் சுகாதாரப் பணிகள் தொடங்கின.

வெள்ளம் சூழ்ந்த சுகாதார நிலையம்

குமரி கடல் பகுதியில் மையம் கொண்ட ஒகி புயலால் நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் நீர் நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் நிரம்பிக் கிடக்கிறது. காட்டாறுகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் வடிந்து வருகிறது. சில இடங்களில் குளங்களில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புப் பகுதிக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளானார்கள். 

அணைகள் நிரம்பி வழிவதால் அணைகளிலிருந்து உபரித் தண்ணீர் முழுமையாகத் திறக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. அதனால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பணகுடி பகுதியில் பேருந்து நிலையம்,  மருத்துவமனை ஆகியவை டிசம்பர் 1-ம் தேதி தண்ணீரால் சூழப்பட்டன. 

அனுமன் நதியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளானார்கள். பேருந்து நிலையம் தண்ணீரில் மூழ்கியதால் பஸ்கள் ஊருக்குள் வரமுடியவில்லை. பணகுடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் மழை நீர் புகுந்ததால் அங்கிருந்த நோயாளிகள் ஆம்புலன்ஸ் மூலமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆரம்ப சுலாதார மையம்

இந்த நிலையில் அந்தப் பகுதிகளில் இன்று ஆய்வு செய்த ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வான இன்பதுரை, தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார். போர்க்கால அடிப்படையில் பணகுடியில் தேங்கிய தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் ஆரம்ப சுகாதார நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. அத்துடன், சுற்று வட்டாரப் பகுதிகளில் மழைக்கால நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் 40 வாகனங்களில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.