''குமரி மாவட்டத்துக்கு ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும்..!'' விஜயதரணி எம்.எல்.ஏ கோரிக்கை

ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களும், கேரளாவின் சில பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதி மக்கள் இயல்பு வாழ்கைக்கு திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகும். அந்த அளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய சாகுபடி பயிர்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. மக்களின் சொத்துக்கள் அழிந்ததோடு பொருளாதாரப் பேரழிவும் ஏற்பட்டுள்ளதால் ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

விஜயதரணி

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி கூறுகையில், ''குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் வங்கிகளில் கடன் பெற்றும், நகை அடகுவைத்தும் பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் சாகுபடி செய்திருந்தனர். அவை அழிந்து விட்டன. எனவே, அந்த கடன்களை எல்லாம் முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். புயல், மழையால் விளை நிலங்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. பல ஆயிரம் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பலர் வீடுகளை இழந்துள்ளனர். பலர் உயிர் இழந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் வீதமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். 


குமரி

குமரியில் புயல், மழை வெள்ள இழப்புகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய மாநில அரசுகள் குமரிக்கு மாவட்டத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அனைத்து உதவிகளையும் போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும். மூத்த அமைச்சர் தலைமையில் ஒரு குழுவை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அனுப்பி மக்கள் படும் வேதனைகளை, துயரங்களை நேரில் பார்க்க பிரதமர் மோடி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய பேரிடர் என்பது போல கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த துயரத்துக்கு பேரிடர் நிவாரண உதவி போல அனைத்து உதவிகளையும் உடனே செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தி உள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!