வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (03/12/2017)

கடைசி தொடர்பு:04:30 (03/12/2017)

மெஜாரிட்டி இல்லாத எடப்பாடி அரசை அப்புறப்படுத்த வேல்முருகன் வலியுறுத்தல்!

''தமிழக சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு 111 எம்.எல்.ஏ-க்கள்தான் ஆதரவு என்பது சட்டப்படி தமிழக 'அரசு' க்கு உயிர் தரக்கூடியதல்ல. எனவே, தமிழக அரசை ஆளுநர் அப்புறப்படுத்த வேண்டும்'' என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன்  கூறியுள்ளார்.

velmurugan


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அண்மையில் கோவைக்குச் சென்ற ஆளுநர் அங்கு மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையர் மற்றும் அரசதிகாரிகளைக் கூட்டி அரசின் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். இது கடும் கண்டனத்திற்குள்ளானது. இந்த ஆய்வுப் பணி என்பது அவரது பணி இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பணி. மக்கள் தேர்ந்தெடுத்த அரசு, அரசமைப்புச் சட்டப்படியாக இருப்பதை, இயங்குவதை கவனிப்பதே ஆளுநரின் பணி. ஆனால் அதைச் செய்யத் தயாரில்லாதவராக இருக்கிறார் தமிழக ஆளுநர். அதைச் செய்யாததோடு தன்னையே அரசாக முன்னிறுத்தவும் தலைப்பட்டிருக்கிறார். அரசமைப்புச் சட்டப்படி தமிழக அரசுக்கு 118 எம்.எல்.ஏ-க்கள் என்ற பெரும்பான்மை பலம் கட்டாயம். ஆனால், 111 எம்.எல்.ஏ-க்கள்தான் ஆதரவு என்ற நிலையில், கே.பழனிச்சாமி முதல்வராகத் தொடர்வது எப்படி என்பதுதான் கேள்வி. இதை ஏன் கவனிக்கத் தவறுகிறார் ஆளுநர்? 

சட்டத்திற்குப் புறம்பாக பழனிச்சாமியின் அமைச்சரவை தொடர அனுமதித்திருக்கும் ஆளுநர், அமைச்சரவையை ஆஃப் செய்துவிட்டு, அதன் தலைமைப் பொறுப்பை தானே கைப்பற்றிக் கொண்டுள்ளார். இதை உறுதி செய்யும் வண்ணமே, ஆளுநர் மாளிகையில் ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலர் (அடிஷனல் சீஃப் செக்ரெட்டரி) என்கிற புதிய பதவி உருவாக்கப்பட்டு, அதில் ஆர்.ராஜகோபால் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். 

governer


ராஜகோபால் மத்திய அரசின் உள்துறையில் மாநிலங்களுக்கிடையிலான குழுவின் முன்னாள் ஆலோசகராக இருந்தவர்; இப்போதைய மத்திய அரசு ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர். இந்த நியமனம் அரசியல் சாசனத்திற்கும் அதன் மக்களாட்சிக் கோட்பாட்டிற்கும் நேர் எதிரானது மட்டுமல்ல; வாக்களித்து இந்த அரசைத் தேர்ந்தெடுத்த தமிழக மக்களுக்கு இழைத்த மாபெரும் அநீதியாகும். அப்படியிருந்தும் பழனிச்சாமி தரப்பிலிருந்து இதற்கு எதிர்ப்பில்லாதது புரிந்துகொள்ளக்கூடியதே. 

111 எம்.எல்.ஏ-க்கள்தான் ஆதரவு என்கிறபோது பெரும்பான்மை இல்லாத பழனிச்சாமி அமைச்சரவை பதவியில் நீடிக்கும் அருகதையை இழந்திருக்கிறது. ஆனால், அதை அப்புறப்படுத்தச் செய்ய வேண்டியதைச் செய்யாமல் தானே “அரசு” என்பதாக, தனக்கு கூடுதல் தலைமைச் செயலரையே நியமித்துக் கொண்டிருக்கிறார் ஆளுநர்'' என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க