வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (03/12/2017)

கடைசி தொடர்பு:12:05 (22/06/2018)

ராமநாதபுரம்-பரமக்குடி கோயில்களில் திருக்கார்த்திகை சிறப்பு வழிபாடு!

ராமநாதபுரம் மற்றும் பரமக்குடியில் உள்ள முருகன் கோயில்களில் திருக்கார்த்திகை தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
ராமநாதபுரம் அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் திருக்கார்த்திகை திருநாளை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும்,விசேஷ தீபாராதனைகளும் நடந்தன.மாலையில் ஸ்ரீவள்ளி,தெய்வானை சமேத அருள்மிகு முருகப்பெருமான் கோயிலுக்குள் சிறிய தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவினை முன்னிட்டு அருள்மிகு சுவாமிநாதசுவாமி சந்தன அலங்காரத்தில் காட்சியளித்தார்.இரவு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவின் தலைவர் காந்தி,செயலாளர் நாகராஜ் மற்றும் நிர்வாகி சிவஞானமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

திருக்கார்த்திகை திருநாளில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிநாதசுவாமி

ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் மூலவரான அருள்மிகு முருகப்பெருமானுக்கு காலையில் சிறப்பு அபிஷேகமும்,தீபாராதனைகளும் நடந்தன.இரவு கோயில் முன்பாக அர்ச்சகர் வையாபுரி சொக்கப்பனை கொளுத்திய பிறகு விஷேச தீபாராதனைகளும் நடந்தன.ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் எஸ்.கணேசன் செய்திருந்தார்.
 பரமக்குடி அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவர் ஆலயத்தில் மூலவருக்கு திருக்கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும்,விசேஷ தீபாராதனைகளும் நடந்தன.பின்னர் உற்சவரான அருள்மிகு சுந்தரேசுவரரும்,அருள்மிகு மீனாட்சியும் தனித்தனியாக சப்பரங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் அருள்மிகு சுந்தரேசுவரர் மற்றும் மீனாட்சி சன்னதிகள் முன்பாக சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் சோ.பாலசுப்பிரமணியன் செய்திருந்தார்.

திருக்கார்த்திகை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் செந்தில் ஆண்டவர்

பரமக்குடி முத்தாலம்மன் கோயில் படித்துறைத் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு சக்திக்குமரன் செந்திலாண்டவர் திருக்கோயிலில் திருக்கார்த்திகைத் திருநாளை முன்னிட்டு 32 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தன.பின்னர் மூலவரான அருள்மிகு செந்திலாண்டவர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் அமைந்துள்ள அருள்மிகு சண்முகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும்,தீபாராதனைகளும் நடந்தன.விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் சுப.லெட்சுமணன் செய்திருந்தார்.