வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/12/2017)

கடைசி தொடர்பு:06:00 (03/12/2017)

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி சலில் எஸ்.பரேக்!

கேப்ஜெமினி நிறுவனத்தில் பணியாற்றி வரும் சாலி எஸ்.பரேக் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாகவும் (சி.இ.ஓ) நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். 

இன்ஃபோசிஸ்


'இவர் தகவல் தொழில்நுட்ப துறையில் 30 ஆண்டுகளாக அனுபவம் பெற்றவர். தகவல் தொழில்நுட்ப வணிகத்தைச் சிறப்பாக கையாண்டும், வெற்றிகரமாக நிறுவனங்களைக் கையகப்படுத்துவதிலும் நிர்வகிப்பதிலும் பெயர் பெற்றவர். இனி இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றுவார் பரேக்' என்கிறார் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் நந்தன் நிலகேனி.

"சர்வதேச அளவிலான தேடலில் தகுதியானவராகக் கிடைத்திருக்கிறார் பரேக். அவரையே நாங்கள் பெருமையுடன் தேர்வு செய்திருக்கிறோம்" என்கிறார் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ஊதியக்குழு மற்றும் பரிந்துரைக் குழுவின் தலைவராக உள்ள கிரண் மஜூம்தார்-ஷா. 

சலில் எஸ்.பரேக் மும்பை ஐ.ஐ.டியில் பி.டெக் ஏரோனாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்து அமெரிக்காவில் உள்ள கர்னல் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் முதுநிலை பட்டங்களையும் பெற்றிருக்கிறார். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு (2018-2022) இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக அவர் செயல்படுவார். 

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி பதவி வகித்து வந்த விஷால் சிக்கா ஆகஸ்ட் மாதம் பதவி விலகியதைத் தொடர்ந்து தற்காலிக தலைமைச் செயல் அதிகாரியாக பிரவின் ராவ் நியமிக்கப்பட்டு இருந்தார். பரேக் இனி இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகச் செயல்படுவார். வரும் ஜனவரி மாதம் 2-ம் தேதி இவர் பதவியேற்க உள்ளார்.