வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (03/12/2017)

கடைசி தொடர்பு:11:37 (03/12/2017)

'உதகையை காப்போம்' பசுமை கண்காட்சி...! உற்சாகத்தில் குவிந்த மக்கள்

இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், பச்சை கம்பளம் விரித்த புல்வெளிகள், வனங்கள், தேயிலை தோட்டங்கள், அருவிகள் என இயற்கையின் மொத்த அழகையே தனக்கென சொந்தமாக்கி கொண்ட இடம் தான் நீலகிரி மாவட்டம். கடந்த ஒரு சில ஆண்டுகளாக மாவட்டத்தின் சுற்றுச்சூழல் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா  பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தார். சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருக்க பிளாஸ்டிக் பைகள், தட்டு, டம்ளர், மெழுகு பூசப்பட்ட டம்ளர் என அனைத்து பிளாஸ்டிக் பொருள்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பசுமை கண்காட்சிபிளாஸ்டிக் பொருட்களையே தினசரி வாழ்வில் அதிகம் பயன்படுத்தியதால், அதற்கு மாற்றாக எதைப் பயன்படுத்துவது என்ன செய்வது என மக்கள் , வியாபாரிகள் திகைத்தனர். இந்நிலையில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக எத்தகைய பொருட்களை பயன்படுத்தலாம் என மக்களுக்கு அறிவுறுத்த மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன்
'உதகையை காப்போம் இயக்கம்' இரண்டு நாட்கள் பசுமை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.இக்கண்காட்சி மாவட்டக் கண்காணிப்பாளர் மற்றும் தமிழக நகர்புற நிதி உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் அரசு முதன்மைச் செயலருமான சந்திர காந்த் பி.காம்ப்ளே, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் முன்னிலையில் தொடங்கப்பட்டது. 32 மாற்றுப் பொருள்களுக்கான தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பங்கேற்று இயற்கை உரம் தயாரித்தல், மட்கும் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரித்தல், சோலார் மின்சாரம், பயோ கேஸ் பொருள்கள், பயோ கேஸ் தொழில் நுட்பம், மறு சுழற்சிக்கான பொருள்கள் என மாற்று பொருள்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.

பசுமை கண்காட்சி


இக்கண்காட்சி பலருக்கும் உபயோகமுள்ளதாய் இருந்தது, மாற்று பொருட்களை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பதால் பலரும் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இத்தகைய கண்காட்சியிலிருந்து கிடைக்கும் அறிவரைகளால் மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் பல வருடங்களுக்கு முன் இருந்த தூய இயற்கையை நீலகிரி மாவட்டத்தில் திரும்பவும் பெறலாம் என்பது பொதுவான கருத்து.