”இனி அரசுப் பள்ளி, கல்லூரிகளில் பொருட்காட்சி நடத்தக்கூடாது”: நீதிமன்றம் அதிரடி

அ.தி.மு.க அரசின் சாதனை விளக்கப் பொருட்காட்சி இன்று முதன்முறையாக திருப்பூரில் துவங்கியது. திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் இன்று முதல் அடுத்த 45 நாள்களுக்குத் தொடர்ந்து நடைபெற இருக்கும் இப்பொருட்காட்சியை தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு துவங்கி வைத்தார்.  கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் பழனிசாமி மற்றும் திருப்பூர் மாவட்ட எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முன்னதாக திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் அரசு பொருட்காட்சியை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இரு தினங்களுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில் அரசு கல்லூரி மைதானத்தில் பொருட்காட்சி நடத்தப்பட்டால், இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களின் கல்விப் பணி பெருமளவு பாதிக்கும் என்றும், பல்கலைக்கழக தேர்வும் தற்போது நெருங்குவதால், இக்கல்லூரியில் பயிலும் சுமார் 3000 மாணவர்கள் இப்பொருட்காட்சியால்
பாதிக்கப்படுவார்கள் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், " இறுதிக் கட்டத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. இந்நிலையில், அரசுத் தரப்பில் மக்கள் பணம் பல லட்சம் செலவிடப்பட்டு இருப்பதாகவும், தற்போது பொருட்காட்சிக்கு தடை விதித்தால், மொத்தப் பணமும் விரயமாகிவிடும் என்றும் அரசு தரப்பில் தெரிவித்திருக்கிறார்கள். எனவே சில நிபந்தனைகளுடன் இந்தமுறை அரசு கல்லூரி மைதானத்தில் பொருட்காட்சியை நடத்த அனுமதி அளிக்கிறோம். குறிப்பாக சம்பந்தப்பட்ட அரசு கல்லூரியில் பயிலும் மாணவர்களின் கல்விப் பணி, எந்த வகையிலும் பாதிக்காதவாறு இந்தப் பொருட்காட்சி நடத்தப்பட வேண்டும். அதேசமயம் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளி மற்றும் அரசு கல்லூரி மைதானங்களில் இனி ஒருபோதும் அரசுப் பொருட்காட்சிகள் நடத்தப்படவே கூடாது என்று தீர்ப்பளித்திருந்தார்.

திருப்பூரில் முதன்முறையாக நடத்தப்படும் அரசு பொருட்காட்சியால், இனி தமிழகத்தில் எந்த அரசு கல்வி நிறுவனங்களிலும் பொருட்காட்சியை நடத்த முடியாத சூழல் தமிழக அரசுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!