ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தி.மு.க மருதுகணேஷுக்கு வைகோ ஆதரவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷுக்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

வைகோ

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து இடைத்தேர்தல் ரத்துசெய்யப்பட்டது. இதனிடையே, டிசம்பர் இறுதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், சசிகலா அணி சார்பில் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிட உள்ளனர். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா தீபா பேரவை சார்பில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தே.மு.தி.க. த.மா.கா, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துவிட்டன. தி.மு.க வேட்பாளருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இன்று ம.தி.மு.க-வின் உயர்நிலைக்குழு கூட்டம் எழும்பூரில் உள்ள தாயகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து வைகோ பேட்டி அளிக்கையில், “தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் மத்திய அரசு முன் மெளனம் காத்து வருகிறது அ.தி.மு.க அரசு. நூற்றாண்டுகள் கண்ட திராவிட இயக்கத்தின் பாரப்பரியத்தை காக்க வேண்டிய கடமை உள்ளது. இதனால் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து வருகிற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க-வுக்கு ஆதரவு அளிப்பதாக ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!