வெளியிடப்பட்ட நேரம்: 12:52 (03/12/2017)

கடைசி தொடர்பு:12:52 (03/12/2017)

இடிந்து விழும் அபாயத்தில் கடையநல்லூர் சட்டமன்ற அலுவலகம்!

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற அலுவலகம் இடிந்து விழக்கூடிய நிலையில் இருப்பதால், பொதுமக்கள் அந்த அலுவலகத்துக்கு வருவதற்கே அஞ்சும் நிலைமை உள்ளது.

சட்டமன்ற அலுவலகம்

நெல்லை மாவட்டம் கடையநல்லூரின் சட்டமன்ற உறுப்பினராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த முகம்மது அபூபக்கர் உள்ளார். இவரது அலுவலகம் கடையநல்லூர் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள சீவலான் கால்வாய் அருகே அமைந்துள்ளது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கட்டடம் முறையாக பராமரிக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கட்டடத்தின் உள்புறப்பகுதியில் தண்ணீர் வடியும் நிலைமை உள்ளது. சுவர்களிலும் தண்ணீர் இறங்கி ஈரப்பதம் இருப்பதால் சுவர்கள் இடிந்து விழும் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. 

இது குறித்து பொதுப்பணித்துறையினரிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பற்றி எம்.எல்.ஏ-வான முகம்மது அபூபக்கரிடம் பேசியபோது, ’’கடையல்லூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக அனைத்துப் பகுதிகளிலும் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் கருப்பாநதி அணை நிரம்பியதால் அந்த அணைக்கு வரக்கூடிய 500 கனஅடி தண்ணீரை முழுவதுமாக ஆற்றில் திறந்து விட்டு இருக்கிறார்கள். அதனால் சீவலான் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த ஆற்றின் கரையோரம் இருக்கும் எனது அலுவலக கட்டடமும் பாதிக்கப்பட்டு இருக்கிறது’’ என்றார். 

இது பற்றி பேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் கடையநல்லூர் பஜார் கிளையின் செயலாளரான குறிச்சி சுலைமான், ’’கடந்த சில தினங்களாக கனமழை பெய்ததால் ஊருக்குள் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. அதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டது. எனவே தேங்கிக் கிடக்கும் தண்ணீரை அகற்றிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ-விடம் மனு கொடுக்க அவரது அலுவலகத்துக்குச் சென்றேன். அப்போது அவரது அலுவலகக் கட்டடமே இடிந்து விழக்கூடிய நிலையில் இருந்ததை பார்த்தேன். 

இடிந்து விழும் நிலை

ஏற்கெனெவே சில வருடங்களுக்கு முன்பு இந்த அலுவலகத்தின் சுற்றுச்சுவர் மழையின்போது இடிந்து விழுந்தது. இப்போது கட்டடமே மழைநீர் கசியும் நிலையில் இருப்பதால் இங்கு வந்து எம்.எல்.ஏ-விடம் மனுக் கொடுக்கவே பொதுமக்கள் அச்சப்படும் நிலைமை இருக்கிறது. அதனால் அந்த கட்டடத்தில். பெரும் சேதம் ஏற்படுவதற்கு முன்பாக அதனை சரிசெய்ய  அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் விருப்பம்’’ என்றார்.