வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (03/12/2017)

கடைசி தொடர்பு:16:00 (03/12/2017)

”இது கறுப்பு தினம்!” முதல்வர் விழாவில் கர்ஜித்த மாற்றுத்திறனாளிகள்

புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகள் விழாவில் முதலமைச்சர் நாராயணசாமிக்கு எதிராக கோஷமிட்டு, அவரை முற்றுகையிட மாற்றுத்திறனாளிகள் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

நாராயணசாமி

புதுச்சேரி அரசு சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விழா இன்று (03.12.2017) ஜெயராம் திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டது. முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். அப்போது, மாநில அரசின் சாதனையாளர்கள் விருது பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளையும், 8 தம்பதிகளுக்கு திருமண ஊக்கத்தொகைகளை வழங்கியும் நாராயணசாமி பாராட்டினர். அதன்பின்னர் முதலமைச்சர் நாராயணசாமி விழாவில் பேச தொடங்கியபோது, மாற்றுத்திறனாளிகள் அனைவரும் எழுந்து நின்று ”இது கறுப்பு தினம். மாற்றுத்திறனாளளிகளுக்கு 3 சதவிகிதம் இடஒதுக்கீட்டின் படி அரசு வேலைவாய்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை. இலவச அரிசி உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. அரசு நிறுவனங்களில் வேலை வழங்க வேண்டும்” என தங்களது சட்டையில் கறுப்பு பேஜ் அணிந்து கோஷமிட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மாற்றுத்திறனாளிகள்

தொடர்ந்து பேசிய நாராயணசாமி, ”புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 259 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அதேபோல பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். நிச்சயமாக பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான 8 கோடி ரூபாய் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். அந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசை அணுகிக் கடனை தள்ளுபடி செய்ய நடவவடிக்கை எடுப்போம். புதுச்சேரி அரசில் நிதிப்பற்றாக்குறை இருந்தாலும், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற முனைந்து செயல்படுவோம்” என்று தெரிவித்தார். எந்த விழாவானாலும் குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது பேசும் முதலமைச்சர் நாராயணசாமி, இந்த எதிர்ப்பு கோஷத்தால் சில நிமிடங்களில் தனது பேச்சை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க