வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (03/12/2017)

கடைசி தொடர்பு:12:52 (04/12/2017)

’கலெக்டர் சார்.. இந்த ரோட்டையும் கொஞ்சம் கவனியுங்கள்!’ - அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்த நூதன எதிர்ப்பு

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அதனைக் கண்டித்து கவன ஈர்ப்பு வாசகம் அடங்கிய அட்டைகள் சாலையின் நடுவில் இருந்த குழிகளில் வைக்கப்பட்டன.

கண்டன வாசகம் அடங்கிய அட்டை

நெல்லை-பாபநாசம் சாலையானது மேலப்பாளையம் சந்தை முக்கு பகுதியில் இருந்து ஊரை விட்டு வெளியேறும் வரையிலும் சுமார் 1 கி.மீ தூரத்துக்கு குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது. தார் இல்லாமல், கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குழியாக இந்தச் சாலை கிடக்கிறது. ஆனால், அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. இதுதொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூகநல அமைப்பினரும் மனுக்கள் அளித்தும் போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

தற்போது ஒகி புயலால் ஏற்பட்ட தொடர்மழையால் இந்தச் சாலை சேறும், சகதியுமாக மாறியிருக்கிறது. ஆங்காங்கே மழைநீர் தேங்கிக் கிடப்பதால் குழிகளின் ஆழம் தெரியாமல் வாகன ஓட்டிகள், சாலையில் நிலைதடுமாறி கீழே விழுந்த நிகழ்வுகளும் நடந்துள்ளன. மோசமான சாலையின் காரணமாக வாகன விபத்துகளும் அதிகமாக நடைபெறுகின்றன. அதனால் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பாக சாலையின் குழிகளில் கண்டன வாசகங்கள் அடங்கிய அட்டைகள் வைக்கப்பட்டன.

கண்டன அட்டைகள்

அந்த அட்டைகளில், ’தலைக்கவசம் போடாத எங்களுக்கு அபராதம். தரமான சாலை போடாத உங்களுக்கு?’ என கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. அத்துடன், ‘கலெக்டர் சார்.. இந்த ரோட்டையும் கொஞ்சம் கவனியுங்க’ ’டிஜிட்டல் இந்தியாவின் தரமான சாலை?’ நெடுஞ்சாலைத்துறை பொறியாளருக்கு இன்னும் கமிஷன் வந்து சேரலையா?’ ’சட்டமன்றத்தில் எந்தப் பிரச்னைக்கும் பேசாத எம்.எல்.ஏ., அட்லீஸ்ட், இந்தச் சாலைக்காகவாவது வாய் திறங்க’ என அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏ-வைச் சீண்டும் வகையில் வாசகங்கள் கொண்ட அட்டையை சாலையின் குழிகளில் வைத்தனர். தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் லெனின், மேலப்பாளையம் பகுதி இளைஞரணிச் செயலாளர் சுலைமான், பகுதிச் செயலாளர் ரசூல்மைதீன் ஆகியோர் மேற்கொண்ட இந்த நூதன கண்டன நிகழ்ச்சியை அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தபடியே சென்றனர்.