5 மணிநேரம் காத்திருந்த பயனாளிகள்...! ஓ.பி.எஸ். புகைப்படம் புறக்கணிப்பு? - திருப்பூர் அரசுப் பொருட்காட்சி பரிதாபம்

அ.தி.மு.க அரசின் சாதனை விளக்கப் பொருட்காட்சி முதன்முறையாக திருப்பூரில் நேற்று தொடங்கியது.

 

திருப்பூர் சிக்கண்ணா அரசுக் கல்லூரியில் தொடர்ந்து 45 நாட்களுக்கு நடைபெற இருக்கும், இந்தப் பொருட்காட்சியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கிவைத்தார். கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் பழனிசாமி மற்றும் திருப்பூர் மாவட்ட எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தொடக்க விழாவில் அதிக கூட்டத்தைக் காட்டவேண்டும் என்பதற்காக, வழக்கம்போல பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விலையில்லா தையல் இயந்திரம், விலையில்லா தேய்ப்புப் பெட்டி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்காக திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிகள் பலர் அழைத்து வரப்பட்டிருந்தார்கள். மாலை 5 மணிக்கு துவங்க இருந்த இவ்விழாவுக்கு மதியம் 1 மணிக்கே பயனாளிகளை அழைத்து வந்து காத்திருக்கச் செய்தார்கள் அரசு அதிகாரிகள். அதில் குறிப்பாக அரசு வழங்கும் விலையில்லா ஸ்கூட்டரைப் பெறுவதற்காக 10-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளும் அழைத்து வரப்பட்டிருந்தனர். அதிகாரிகள் அவர்களை விழா மேடையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஸ்கூட்டர்களின் அருகிலேயே பல மணிநேரம் காக்க வைத்ததால், மாற்றுத்திறனாளிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். இருப்பினும் மாலை 5 மணிக்குத் துவங்க வேண்டிய நிகழ்ச்சியை, 1 மணி நேரம் தாமதமாக வந்து 6 மணிக்குப் பின்னரே தொடங்கிவைத்தார் அமைச்சர் கடம்பூர் ராஜு.

அரசு விழாவின் நிலைமை ஒருபுறம் இப்படியிருக்க, விழாவில் அரசுத்துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில், துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் புகைப்படத்தை திட்டமிட்டே புறக்கணித்துவிட்டார்கள் என பொங்கிக்கொண்டு இருந்தார்கள் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள். "சிறுபான்மையினர் நலத்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை ஆகிய 2 அரங்குகளில் மட்டுமே பெயரளவுக்கு ஓ.பி.எஸ்ஸின் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், மற்ற அனைத்து அரங்குகளிலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு இணையாக எடப்பாடியின் புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள் என்று புலம்பிவிட்டுச் சென்றார்கள் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!