வெளியிடப்பட்ட நேரம்: 20:04 (03/12/2017)

கடைசி தொடர்பு:11:32 (04/12/2017)

வெள்ளத்தால் சேர்ந்த ஆற்று மணல் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கப்படுமா?! கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்று மணல் அதிகமாகச் சேர்ந்துள்ளது. அதனைக் கொள்ளையரிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆற்று மணல்

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் அனுமதி பெற்ற குவாரிகள் மட்டும் அல்லாமல், சட்டவிரோதமாகவும்  பல இடங்களில் மணல் குவாரிகள் அமைத்து மணல் அள்ளப்பட்டது. அவைபெரும்பாலும் அரசியல் பின்னணி கொண்டவர்களால் நடத்தப்பட்டவை.  பல இடங்களில் அரசின் விதிமுறைகளை மீறி பொக்லைன் இயந்திரம் மூலமாக 20 அடி ஆழம் வரையிலும் மணல் அள்ளப்பட்டது.

இதை எதிர்த்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தாமிரபரணி ஆற்றில் மணல் குவாரிகளுக்குத் தடை விதித்தது. அதனால் மணல் கொள்ளையர்களின் பிடியில் இருந்து தாமிரபரணி ஆறு தப்பியது. இருப்பினும், திருட்டுத்தனமாக மணல் அள்ளும் சம்பவங்கள் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஒரு சில இடங்களில் நடைபெற்றுவந்தன.

நெல்லை மாவட்டத்தில் 1992-ல் மிகப்பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் பின்னர் 25 வருடங்களுக்குப் பிறகு இந்த ஆண்டு கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் தாமிரபரணி ஆற்றில் மணல் சேர்ந்துள்ளது. அத்துடன், காட்டாறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கால்வாய்கள் ஓடைகள் போன்ற இடங்களிலும் மணல் குவிந்துள்ளது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ரோஸ்மியாபுரம் நொச்சி ஓடையில் காட்டாற்று வெள்ளம் வந்ததால் அந்தப் பகுதியில் சுமார் 4 கி.மீ தூரத்துக்கு ஓடை முழுவதும் 3 முதல் 10 அடி உயரத்துக்கு மணல் தேங்கிக் கிடக்கிறது. 

மணல் வரத்து

தாமிரபரணி ஆற்றில் மட்டும் அல்லாமல் அனுமன்நதி, கொடுமுடியாறு, கடனாநதி, கருப்பாநதி உள்ளிட்ட பல்வேறு நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மணல் சேர்ந்துள்ளது. மாவட்டம் முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்பிலான மணல் கொட்டிக் கிடக்கும் நிலையில், மணல் கொள்ளையர்களின் பார்வை அதை நோக்கித் திரும்பி இருக்கிறது. அதனால், நெல்லை மாவட்டத்தில் இருந்து மணல் கொள்ளையடிக்கப்படாமல் தடுக்க, வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.