வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (03/12/2017)

கடைசி தொடர்பு:11:17 (04/12/2017)

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்: கோவை டாஸ்மாக் கடைகள் ஹவுஸ்புல்!

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கோவையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அ.தி.மு.க.வினரின் கூட்டம் அலைமோதியது.

தமிழக அரசு சார்பில், கோவையில் இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இன்று நடக்கிறது. ரகு மரணம், பேனர் சர்ச்சை, ஒகி புயல் இப்படி பல்வேறு விவகாரங்களுக்கு மத்தியில் இந்த விழா நடந்துவருகிறது. மற்ற ஊர்களில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களைவிட, தடபுடல் ஏற்பாடுகளுடன் கோவை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடந்துவருகிறது.

திரும்பிய பக்கம் எல்லாம் விதிமுறைகளை மீறிய பேனர், கட் அவுட்கள், போக்குவரத்து மாற்றம் என்று நாலாப் பக்கமும் மக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம். இந்நிலையில், இன்று நடக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக, கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் விழா நடக்கும் இடத்துக்கு வந்த வண்ணம் இருந்தனர். குறிப்பாக, கோவை டாஸ்மாக் கடைகளில் அ.தி.மு.க-வினரின் கூட்டம் அலைமோதியது. சில தொண்டர்கள், சாலையையே பாராக மாற்றி, சரக்கடித்துவிட்டு சென்றனர். மேலும், விழா நடக்கும் வ.உ.சி மைதானம் வளாகம், வாகன நிறுத்துமிடம் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க தொண்டர்கள் சரக்கடித்துவிட்டே விழாவுக்கு செல்கின்றனர்.