வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (03/12/2017)

கடைசி தொடர்பு:18:40 (03/12/2017)

ஒகி புயல் மீட்புப் பணி..! ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

கடலில் சிக்கித் தவிக்கும் 2,384 மீனவர்களிடம் தொடர்பு கொண்டு அவர்களைக் காப்பாற்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 


ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் பார்வையிட்டனர். 
பாதிப்புகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், 'தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர் சேதம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. பயிர் சேதம், மரங்கள் சேதம், படகுகள் சேதம் குறித்த கணக்கெடுப்பு விவரங்கள் வந்தவுடன் உரிய நிவாரணம் வழங்கப்படும்.

கன்னியாகுமரியில் வருவாய், காவல்துறை சார்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. முன்னெச்சரிக்கையாக மின் தடை செய்யப்பட்டு உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது. கடலில் சிக்கித் தவிக்கும் 2,384 மீனவர்களை தொடர்பு கொண்டு காப்பாற்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. காணமல் போன மீனவர்களின் விவரங்களை சேகரிக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. சாலையில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.