வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (03/12/2017)

கடைசி தொடர்பு:10:32 (04/12/2017)

மாற்றுத் திறனாளிகள் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை..! கொதிக்கும் டிசம்பர் 3 மூவ்மென்ட்

மாற்றுத் திறனாளிகளுக்கான சட்டம் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று டிசம்பர் 3 மூவ்மென்ட்ன் மாநிலத் தலைமை அதிகாரி தீபக் நாதன் குற்றம்சாட்டினார். 


ஆண்டுதோறும் டிசம்பர் 3-ம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினமாக  கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இதனையொட்டி இன்று சென்னையில் "டிசம்பர் 3 மூவ்மென்ட்" என்ற  தன்னார்வல அமைப்பு சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகன ஊர்வலம் நடைபெற்றது. சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கி  லேங்ஸ் பூங்காவரையில் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கிவைத்தார். 

தீபக் நாதன்

விழாவில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். இவ்விழாவை ஏற்பாடுசெய்த "டிசம்பர்-3 மூவ்மென்ட்"-ன் மாநிலத் தலைமை அதிகாரி  தீபக் நாதனிடம் பேசினோம். பொதுவாக மாற்றுத்திறனாளிகள் என்றால் பொதுமக்களிடையே பரிதாபம்தான் எழுகிறது. இதனால் எங்களைச் சிலர் தாழ்வாக உணருகின்றனர். எனவே, தங்கள் அமைப்பின் பெயரில் மாற்றுத் திறனாளிகள் என்ற சொல் அல்லாமல் வேறு பெயரை வைத்து அவர்களது தன்னம்பிக்கையை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் வைத்துதான் இந்த 'டிசம்பர் 3 மூவ்மென்ட்' என்று பெயரிட்டுள்ளோம்.

உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மாற்றுதிறனாளிகள் அமைப்புகள் உள்ளன. ஆனால், எங்களது அமைப்பு மிகவும் எளிமையான மக்களுக்காக செயல்படும் மாநில அமைப்பாகும். இன்று இங்கு நடக்கும் இவ்விழாவை சென்னைப் பகுதி அமைப்பின் சார்பாக  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும்  சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏழை எளிய மாற்றுத்திறனாளிக்கு அந்தச் சட்டத்தால் எந்தவிதப் பயனும் இருப்பதாக தெரியவில்லை.

"மேக் தி ரைட் ரியல்"(Make the Right real) என்ற 'இன்சியான் உத்தியை' எதிர்நோக்கிப் பயணிப்பதே இந்த அமைப்பின் நோக்கம். எங்களது கோரிக்கையை நிறைவேற்ற பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். மேலும், போராட்டங்கள் நடத்தியுள்ளோம். ஆனால், எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. உதாரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் மாத பென்ஷன் சரிவர வழங்கப்படவில்லை என்று அரசிடம் பலமுறை கோரினோம்.

ஆனால், முறையாக எங்களுக்குப் பதில் கிடைக்கவில்லை. 2016-ம் ஆண்டே மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதே எங்களுக்கு மிகவும் கவலையாக உள்ளது. அடுத்து ஒரு மாபெரும் மாநாடு நடத்தவிருக்கிறோம். அதன்மூலம் எங்களது அனைத்து கோரிக்கையை மீண்டும் முன்னிறுத்த உள்ளோம்' என்று தெரிவித்தார்.