விஷாலுக்குப் பின்னால் யாரும் இல்லை! நடிகை லதா

விஷால் தேர்தலில் நிற்பதற்குப் பின்னால் யாரும் இல்லை என்று நடிகை லதா தெரிவித்துள்ளார். 

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியைக் கொண்டாடும் விதமாக மதுரையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்விழாவுக்கு கலந்துகொள்ள மதுரை வந்த பழம்பெரும் நடிகை லதா பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில் "எனக்கு 15 வயதாக இருக்கும்போதே சினிமாத்துறைக்கு வந்துவிட்டேன். 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தின் மூலம் லதாவாகிய நான் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டேன்.

என்னுடைய முதல் படமே வெற்றிப் படமாக அமைந்தது. அ.தி.மு.க-வின் 3-வது பெண் உறுப்பினர் நான்தான். மதுரை, திருச்சி உள்ளிட்ட ஊர்களில் சகுந்தலம் என்ற நாட்டியக் கலை நிகழ்ச்சி மூலம் நான் நடித்து அதன்மூலம் கிடைத்த 35 லட்சம் ரூபாயை கட்சி நிதிக்காக அப்போதே வழங்கினேன். தமிழகத்தில் அ.தி.மு.க-வில் தற்போதுள்ள சூழ்நிலைகள் மாறியுள்ளன. ஜெயலலிதா மறைந்தவுடன் கட்சியில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தின் கையில் போக இருந்தது.  ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் கடந்த முறை பிரசாரம் செய்தேன். தற்போது ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் மதுசூதனனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளேன். ஜெயலலிதா மகள் என சிலர் கூறுவதை வன்மையாகக் கண்டிக்கின்றேன். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது ஏன் உறவினர்கள் தைரியமாக கூறவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெரும் தலைவர் ஆவார். அவரைத் தவறாக விமர்சிக்கின்றனர். சொத்துக்காகதான் உறவினர்கள் என்று தற்போது பொய் கூறுகின்றனர். எடப்பாடி தலைமையிலான அரசு தமிழகத்துக்கு நல்லது செய்வார்கள் என நம்புகின்றேன்.

ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சைப் பெற்றபோது நான் பார்க்கச் சென்றேன். என்னால் பார்க்க முடியவில்லை. கருணாநிதி காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது புகைப்படம் எடுத்து வெளியிட்டது போல், ஏன் ஜெயலலிதாவுக்கு புகைப்படம் வெளியிடவில்லை. ஆர்.கே நகர் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். விஷால் போட்டியிடுவதற்குப் பின்னால் யாரவது இருக்கின்றார்கள் என யாரும் தவறாகக் கூறக்கூடாது. விஷாலுக்குப் பின்னால் யாரும் இல்லை. தற்போது ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இணைந்தது மகிழ்ச்சி. புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி உருவாக்கிய கட்சி உடைந்துவிடக்கூடாது என்பது என்னுடைய கருத்து. அதுதான் என் வேண்டுகோள்' என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!