வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (03/12/2017)

கடைசி தொடர்பு:10:01 (04/12/2017)

'கோவை அவினாசி சாலையில் எந்த பேனருக்கும் அனுமதி பெறவில்லை': பகீர் குற்றச்சாட்டு

ஆளுங்கட்சி நடத்தும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவால் கோவை மக்கள் கடும் அவஸ்தயை அனுபவித்துவருகின்றனர். நகர் முழுவதும் பேனர் வைத்து போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்வது, போக்குவரத்து வழித்தடங்களை மாற்றியமைப்பது எனத் தொடர்ந்து அட்ராசிட்டி செய்துவருகின்றனர். இந்நிலையில், விழா நடக்கும் வ.உ.சி மைதானத்துக்குச் சென்றோம். கோவை மட்டுமல்லாமல் மற்ற நகரங்களிலிருந்தும் போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். விழாவை முன்னிட்டு, மேடை அருகே தார்ச்சாலை அமைப்பது, பிரமாண்ட வரவேற்பு பந்தல்கள் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன.

விழா மேடை அமைப்பது, கட்சிக்கொடி கட்டுவது, பேனர் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக ஏராளமான தொழிலாளர்கள் வெளியூர்களிலிருந்து கோவைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். நேற்றிரவு கடும் குளிரிலும், அந்தத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தூங்காமல், வேலை செய்துகொண்டிருந்தனர்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் தொடங்கியது முதலே, சர்ச்சையைக் கிளப்பியது பேனர் விவகாரம்தான். ரகு என்ற மென்பொறியாளர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. குறிப்பாக, நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி, கோவையில் பேனர்கள், கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, தி.மு.க எம்.எல்.ஏ கார்த்தி சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், கோவையில் அனுமதியின்றி மற்றும் பொதுமக்களுக்கு இடையூராக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, கோவையில் உள்ள 5 மண்டலங்களிலும், அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றியதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால், தற்போது கோவை அவினாசி சாலையில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் எதுக்குமே முறையாக அனுமதி பெறவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் எஸ்.பி.தியாகராஜன் கூறுகையில், அவினாசி சாலையில் வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான பேனர்கள் விதிமுறைகளை மீறித்தான் வைக்கப்பட்டுள்ளன. பேனர்களை அகற்றினோம் என்று மாநகராட்சி சொல்வது தவறு. கோவை, புறநகர் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் சிலவற்றை அகற்றிவிட்டு, அதை இந்தக் கணக்கில் சேர்க்கின்றனர்.

விழா தேதி நெருங்க, நெருங்க அவினாசி சாலைகளில் பேனர்கள் அதிகமாக வைக்கப்பட்டன. இவை அனைத்துக்குமே முறையான அனுமதி பெறவில்லை. அனுமதி பெற்ற பேனர்களில், சிறிய அளவிலாவது அனுமதி எண் எழுதியிருக்க வேண்டும். ஆனால், எந்த பேனரிலும் அனுமதி எண்ணே குறிப்பிடப்படவில்லை என்றார்.