வெளியிடப்பட்ட நேரம்: 20:16 (03/12/2017)

கடைசி தொடர்பு:13:17 (04/12/2017)

''பி.ஜே.பி-க்கு அடிமைச்சேவகம் செய்கிறது அ.தி.மு.க!'' - வைகோ ஆவேசம்

வைகோ, vaiko

'ஆர்.கே.நகரில் எந்தக் கட்சி யாருக்கு ஆதரவு கொடுக்கப்போகிறது?' என்ற கேள்விதான் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளுக்கிடையே, திடீர் திருப்பமாக நடிகர் விஷாலும் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில், இன்றையதினம் உயர்நிலைக் குழுக் கூட்டத்தை நடத்திமுடித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தி.மு.க-வுக்கு ஆதரவு அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

வருகிற 21-ம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான தி.மு.க - அ.தி.மு.க நேரடியாக மோதுகின்றன. இதில், அ.தி.மு.க சார்பில், மண்ணின் மைந்தனான மதுசூதனன் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளார். சசிகலா அணியைச் சேர்ந்த டி.டி.வி தினகரனும் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். தி.மு.க சார்பில், மருதுகணேஷ் போட்டியிடுகிறார். பி.ஜே.பி சார்பில் கரு.நாகராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு வரையிலும் 'மக்கள் நலக் கூட்டணி'யாக ஒன்றுபட்டு செயலாற்றிவந்த ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், இந்தியக் கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது தனித்தனியே பிரிந்துவிட்டன. 

இந்நிலையில், எழும்பூரில் உள்ள ம.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற உயர்நிலைக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, ''ஆர்.கே.நகரில் தி.மு.க-வை ஆதரிக்கப்போகிறோம்'' என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய வைகோ, "தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டு காலமாக ஏற்பட்டுள்ள அரசியல்  சூழல், தமிழகத்தின் எதிர்காலம் குறித்த கவலையையும், நம்பிக்கை இன்மையையும் உருவாக்கி உள்ளது. அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்ட அ.தி.மு.க., மாநில உரிமைகளை மத்திய பி.ஜே.பி அரசிடம் ஒவ்வொன்றாகப் பலி கொடுத்துவிட்டது. டெல்லியின் தாழ் பணிந்து கிடப்பதால், தமிழக மக்களின் கடுங் கோபத்துக்கு ஆளாகியுள்ளது" எனக் குற்றம் சாட்டினார்.

வைகோ, vaiko

தொடர்ந்து பேசியவர், "இந்தியாவிலேயே முதன்முதலாக மாநில சுயாட்சி முழக்கத்தைத் தமிழ் மண்ணிலிருந்துதான் பேரறிஞர் அண்ணா   எழுப்பினார். அண்ணாவின் அடியொற்றி, கருணாநிதி, தமிழக சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றியதோடு, இந்தியாவின் பல்வேறு மாநிலத் தலைநகரங்களில் மாநில சுயாட்சி முழக்கம் எழக்  காரணம் ஆனார். ஆனால், இன்று மாநில சுயாட்சி கோரிக்கையை நிராகரித்துவிட்டு கூட்டாட்சித் தத்துவத்துக்கு வேட்டு வைக்கும் நோக்கத்தோடு, பி.ஜே.பி கட்சி தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டுவருகிறது.

காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு எனத் தமிழகத்தின் ஆற்றுநீர் உரிமைகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. கூடங்குளம், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன், மீத்தேன், கச்சத்தீவு, தமிழக மீனவர் நலன், நீட் தேர்வு, நவோதய பள்ளிகள், இந்தித் திணிப்பு என  அனைத்து முக்கியமான பிரச்னைகளிலும், மத்திய பி.ஜே.பி அரசைத் தட்டிக் கேட்கும் துணிவு இல்லாத அ.தி.மு.க ஆட்சி, கை  கட்டி வாய் பொத்தி அடிமைச் சேவகம் புரிகின்றது.

தமிழகத்தின் மொழி, இன, பண்பாட்டு மரபு உரிமைகள் கேள்விக்குறி ஆகிவிட்டன. திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிரான இந்துத்துவ மதவெறி  சக்திகளின் ஆக்டோபஸ் கரங்கள், தமிழகத்தை வளைக்கும் பேராபத்து சூழ்ந்திருக்கின்றது. அ.தி.மு.க அரசை இயக்கிவரும் மத்திய பி.ஜே.பி  அரசு, மறைமுகமாகக்கூட அல்ல.... ஆளுநர் மூலமும் நேரடியாக தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கின்றது. பி.ஜே.பி நடத்திவரும்  திருவிளையாடல்களுக்கு  அ.தி.மு.க ஆட்சியாளர்களும் துணைபோய்க்கொண்டு இருக்கின்றார்கள்.

இத்தகைய செயலை ஜனநாயகத்தின் பால் அக்கறைகொண்ட சக்திகள் வேடிக்கை பார்க்க முடியாது. இந்தச் சூழலில் வரும் டிசம்பர் 21-ம் தேதி நடைபெற இருக்கின்ற ஆர்.கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில், தி.மு.க-வின் வேட்பாளருக்கு ஆதரவு  வழங்கி அவரது வெற்றிக்கு பணியாற்ற ம.தி.மு.க ஒருமனதாக  முடிவு செய்துள்ளது" என்றார்.

பின்னர், "தி.மு.க-வுக்குத் தொடர்ந்து  ம.தி.மு.க  ஆதரவு  அளிக்குமா?" என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்துப் பேசியவர், "நல்லிணக்கமான சூழ்நிலை இரு தரப்பிலும் ஏற்பட்டு வருகின்றபோது இது தொடக்கப்புள்ளி  என்று எடுத்துக்கொள்ளலாம்" என்று கூறிவிட்டு பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக்கொண்டார்.


டிரெண்டிங் @ விகடன்