குமரி வெள்ளத்தைக் கண்டு கலங்கிய ஓ.பி.எஸ்: நிவாரண உதவி வழங்கப்படும் எனத் தகவல்

குமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட ஓ.பன்னீர்செல்வம், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

ஓ.பி.எஸ் நிவாரண உதவி

குமரி மாவட்டத்தைப் புரட்டிப் போட்ட ஒகி புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பார்வையிட்டார். நெல்லையில் கங்கைகொண்டான் பகுதியில் அவரை கட்சியினர் வரவேற்கக் காத்திருந்தனர். ஆனால், குமரி மாவட்டத்தில் இயற்கை பேரிடரால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் சூழலில் அவர்களைச் சந்திக்கச் செல்லும் வழியில் ஆடம்பர வரவேற்புகளை தவிர்த்துவிட்டுச் சென்றார். 

குமரி மாவட்டத்தின் ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், திட்டுவிளை வழியாகச் சென்ற அவர் தடிக்காரண்கோணம், தெரிசனங்கோப்பு, ஈச்சாத்திமங்கலம், இறச்சகுளம், புத்தேரி ஆகிய இடங்களில் பயிரிடப்பட்டு இருந்த நெல் வயல்களைப் பார்வையிட்டார். அங்கு பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் அழுகி வீணாகிவிட்டன. பல இடங்களில் வாழைகள் அனைத்தும் சூறாவளிக் காற்றில் சிக்கி விழுந்துகிடந்தன. முழுவளர்ச்சிக்கு முன்பாக வாழைகள் சரிந்து விழுந்ததால் விவசாயிகள் இழப்பைச் சந்தித்து இருப்பதை பார்த்து அவர் வேதனை அடைந்தார்.  

ஓ.பி.எஸ்

தடிக்காரண்குளம் பகுதியில் ஏராளமான ரப்பர் மரங்கள் விழுந்துகிடந்தன. இவற்றை எல்லாம் பார்வையிட்ட ஓ.பன்னீர்செல்வம், அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். விவசாயிகளின் இழப்பை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’’புயலால் குமரி மாவட்டத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. வாழைகள், நெல் பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. ரப்பர் மரங்கள் சரிந்து விழுந்து இழப்பு ஏற்பட்டுள்ளது.

பாதிப்புகள்குறித்து அதிகாரிகளைக் கொண்டு கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்றுவருகிறது. அதன் அடிப்படையில் பாதிப்புக்குள்ளான அனைத்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். பாதிக்கப்பட்ட விவசாயிகளில் யாரும் விடுபட்டு விடாதபடி மிகுந்த கவனத்துடன் கணக்கெடுப்புப் பணிகளை நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதனால் அனைவருக்குமே உரிய நிவாரணம் வழங்கப்படும்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!