வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (03/12/2017)

கடைசி தொடர்பு:07:45 (04/12/2017)

குற்றாலம் அருவிகளில் தடை நீக்கம்: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 3 நாள்களுக்குப் பின்னர் இன்று விலக்கப்பட்டது. அதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒகி புயல் காரணமாக நெல்லை மாவட்டத்தில் 3 நாள்களாக தொடர்ந்து மழை பெய்தது. அதனால் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கட்டுக்கடங்காமல் கொட்டியதால் குளிக்க முடியாத நிலை உருவானது.

குற்றாலம் அருவி

மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவையும் கடந்து தண்ணீர் கொட்டியது. ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளிலும் ஆர்ப்பரித்துக் கொட்டிய தண்ணீர் காரணமாகக் குளிக்க முடியாத நிலை உருவானது. புலி அருவியிலும் கட்டுக்கடங்காத தண்ணீர் வந்ததால் பொதுமக்கள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. 

கடந்த 3 நாள்களாக கொட்டித் தீர்த்த வெள்ளம் இன்று வடியத் தொடங்கியது. தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வெயில் தலைகாட்டியது. வெள்ளம் வடிந்து குளிக்க ஏதுவான நிலையில் தண்ணீர் கொட்டுவதால் இன்று அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் குற்றால அருவிக்கு வந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்ததுடன், உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர்.