மழை நிவாரணப் பணிகளுக்கு கூடுதல் தொகையை வழங்க வேண்டும் - மத்திய அரசுக்கு ஜி.கே மணி கோரிக்கை

திருப்பூரில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி இன்று திருப்பூர் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மற்றும் டெல்டா பகுதி மாவட்டங்களில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் நெற்பயிர்கள் அதிகளவு சேதமடைந்திருக்கின்றன. எனவே, தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக பகுதிகளுக்கு மத்திய பா.ஜ.க அரசு கூடுதல் நிதியை வழங்க வேண்டும். அத்துடன் அப்பகுதிகளுக்கு வேண்டிய நிவாரணப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும், தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், வறட்சி ஏற்படாமல் தடுக்கவும் தமிழக அரசு முறையான திட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக கொங்கு மண்டல மக்களின் மிக முக்கியக் கோரிக்கையான அத்திக்கடவு திட்டத்தை வெகுவிரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று பரம்பிகுளம்-ஆழியாறு திட்டம், கீழ்பவானி திட்டம் உள்ளிட்ட 20-க்கும் அதிகமான பாசன திட்டங்களையும் தமிழக அரசு நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மூலம் திருப்பூர், கோவை, கரூர் போன்ற நகரங்களில் செயல்பட்டு வரும் சிறு, குறு தொழில்கள் அனைத்தும் முடங்கிப்போய் உள்ளது. அதன்மூலம் தொழிலாளர்கள் பலரும் வேலைவாய்ப்பை இழக்கின்ற சூழல் உருவாகியிருக்கிறது. மேலும், பல லட்சம் தொழிலாளர்கள் வசிக்கும் திருப்பூரில் தற்போது நடைபெற்றுவரும் மேம்பாலப் பணிகளை அரசு விரைந்து முடிக்க வேண்டும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!