ஆர்.கே.நகரில் மக்கள் விரும்பும் மாற்றத்தை பா.ஜ.க மட்டுமே தரும் – தமிழிசை

‘’ஆர்.கே.நகர் தேர்தலில் அந்தத் தொகுதி மக்கள் விரும்பும் மாற்றத்தை பா.ஜ.க மட்டுமே தரும்’’ என கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

tamilisai press meet in thoothukudi airport

கன்னியாகுமரியில் புயல்மழை பாதித்த இடங்களைப் பார்வையிடுவதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்த தமிழிசை செய்தியாளர்களிடம், ‘’ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் மிகுந்த பாதிப்படைந்துள்ளது. கப்பல்கள், போர்க்கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகள் துரிதமாக நடந்துவருகிறது. பிரதமர், தமிழக முதல்வரை தொடர்புகொண்டு தேவையான உதவிகளை வழங்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே ஆக்கபூர்வமான அரசியலைச் செய்துகொண்டிருப்பது பா.ஜ.க மட்டும்தான். ஆனால், ஆக்கபூர்வமான எங்கள் கட்சியை ஏதோ மதவாதக் கட்சி என்று குற்றம் சாட்டுகிறார்கள்.  

வைகோ அவர்கள் தி.மு.க வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் தாராளமக வைத்துக்கொள்ளட்டும். தி.மு.க – ம.தி.மு.க இந்த இருகட்சிகளும் கூட்டணி வைக்கும் முன் துரோகிகள் என ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியதையெல்லாம் மறந்து  பா.ஜ.கவை காரணம் சொல்வது வேடிக்கையாக உள்ளது.

பா.ஜ.க நேர்மறையான அரசியலை செய்துகொண்டிருக்கிறது. ஏதோ திராவிட அரசியலை அழித்து இந்துத்துவ சக்திகள் மோலோங்கிவிடக் கூடாது என்பதற்காக ஆர்.கே நகர் தேர்தலில் நாங்கள் தி.மு.கவுடன் கூட்டணி வைத்துள்ளதாக வைகோ காரணம் சொல்லியுள்ளார். பா.ஜ.கவைப் பார்த்து பயப்படுவதால்தான் அவர் அப்படிச் சொல்கிறார். எல்லா கட்சிகளின் மையப்புள்ளி பா.ஜ.கவையே தாக்கிப் பேசுவதுதான். எத்தனைக் கட்சிகள் தடுத்தாலும் தமிழகத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது. எவ்வளவு விமர்சனம் வைத்தாலும் உத்தரப்பிரதேசத்தில் 14  மாநகராட்சிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. ஆர்.கே.நகரில் மக்கள் விரும்பும் மாற்றத்தை பா.ஜ.க மட்டுமே தரும்.

புயல் பாதித்த 2 நாள்கள் கழித்துதான் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுகிறார். ஆனால், புயலால் பாதிப்பு ஏற்பட்ட தகவல் கிடைத்த அடுத்த நிமிடத்திலேயே முதல்வரை பிரதமர் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். எல்லாக் கட்சிகளுடன் நேரடியாகப் போட்டி போடுவதும், மக்களிடம் நேரடியாக அணுகுவதும் பா.ஜ.க.தான். பா.ஜ.கவை இந்துத்துவாத கட்சி என்கிறார்களே, கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்க, மத்திய அரசின் பரிந்துரையின்படி அனுப்பப்பட்ட கப்பல்கள், ஹெலிகாப்டர்களில் என்ன இந்துத்துவம் உள்ளது’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!