மீனவ குடும்பத்தினர் சொன்னால்தான் உண்மை நிலவரம் தெரியவரும்...! புயல் பாதிப்பு பற்றி சீமான் கருத்து

திருப்பூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருப்பூர் வந்திருந்தார்.  

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "புயல் பாதித்தப் பகுதிகளில் எல்லாம் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் எண்ணிக்கை எத்தனை என்ற உண்மை நிலவரத்தை அந்தந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சொன்னால் தான் வெளியே தெரியவரும். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் விரைவான நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி இளைஞர் ஒருவர் மரணமடைந்திருக்கிறார். இந்த அரசு அதற்கான ஒரு இரங்கலைக்கூட தெரிவிக்காதது நமக்கு வேதனையைத் தருகிறது. 

ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் மூன்று முனைப் போட்டி நிலவுவதாக ஆண்ட கட்சியும், ஆளுகின்ற கட்சியும் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். எங்களைப் போன்ற கட்சிகளை எல்லாம் ஒரு பொருட்டாகவே அவர்கள் எடுத்துக்கொள்வது இல்லை. இந்தத் தேர்தலில் வாக்காளர்களின் ஓட்டுக்குப் பணம் தருவதற்குப் பதிலாக தங்கக் காசு தர இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள். இது எங்கே சென்று முடியப்போகிறதோ தெரியவில்லை. முதலில் ஓட்டுக்காக பணம் உள்ளிட்ட இதுபோன்ற அன்பளிப்புகள் தருவதை நிறுத்தினால் மட்டுமே இங்கு ஒரு மாற்றம் வருவதற்கான வாய்ப்புகள் அமையும்' என்று சீமான் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!