வெளியிடப்பட்ட நேரம்: 00:15 (04/12/2017)

கடைசி தொடர்பு:08:31 (04/12/2017)

பணம் கொடுக்கும் வைரல் வீடியோ: என்ன சொல்கிறார் எம்.எல்.ஏ கனகராஜ்?

சர்ச்சைகளின் மொத்த உருவமாக நடந்து முடிந்துள்ளது கோவை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா. பேனர் விவகாரத்தில் தொடங்கி ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கிய இந்த விழா தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஆனால், இம்முறை சர்ச்சையில் சிக்கியிருப்பது, சூலூர் தொகுதி எம்.எல்.ஏ கனகராஜ். ஏற்கெனவே சர்ச்சைகளை ஸ்டாக் வைத்து சுற்றும், கனகராஜ் இந்தமுறை, நூற்றாண்டு விழாவுக்காக, மக்களுக்கு பணம் கொடுப்பதுபோன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

கனகராஜ்

அந்த வீடியோ கனகராஜின் வீட்டில் எடுக்கப்பட்டுதுதான். தனது மடியில், பணக் கவர் ஒன்றை வைத்திருக்கிறார். அருகில் அவரது பி.ஏ நின்று கொண்டிருக்கிறார். ஏரியா மற்றும் டைமிங் விவரங்களைச் சொல்லும் கனகராஜ், எத்தனை வண்டி என்று கேட்டுவிட்டு பணத்தை எண்ணிக் கொடுக்கிறார்.

அவரது அருகிலேயே ஏராளமான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. வண்டி விவரங்களுக்கு ஏற்ப பெட்டிகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காகத்தான், கனகராஜ் எம்.எல்.ஏ பணம் கொடுத்தாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து விவரம் கேட்பதற்காக கனகராஜை தொடர்புகொண்டோம், "டீசலுக்காக கொடுத்தப்பணம் அது. வீடியோல என் பக்கத்துல இருந்தது சாப்பாடு பெட்டிகள். அதுல புளி சோறுதான் இருந்தது. சரக்கெல்லாம் இல்லை. அத்தனை சரக்குக்கு நான் எங்க போறது. டீசல் போடாம வண்டி எப்படிப் போகும். காலைல சூலூர்காரன் ஒரு ஆளு என்கிட்ட காசு கேட்டான். அவனை போயா நாளைக்கு வா-னு சொன்னேன். பணம் கொடுக்காத கோவத்துலத்தான் அந்த ஆளு அப்படி பண்ணிட்டான்.

விழாவுக்கு வந்த வண்டிகளுக்கு டீசல் அடிக்க பணம் தந்தேன். அப்பறம் சாப்பாடு, தண்ணீ பாட்டிலுக்கு பணம் கொடுத்தேன் அவ்வளவுத்தான். மக்களுக்கெல்லாம் பணம் கொடுக்கல" என்றார் திட்டவட்டமாக.