`நாங்கள் மட்டுமா கட்-அவுட் வைத்தோம்…?' - எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் திடுக் வீடியோ வெளியிட்ட முதல்வர்!

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக கோவையில் வைக்கப்பட்ட கட்-அவுட்டால் ரகுபதி என்ற இளைஞர் இறந்துவிட்டார் என்று  இவ்வளவு நாளாக எழுந்து வந்த சர்ச்சைக்கு விழாவில் பதில் சொல்லிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேடையில் ஓர் வீடியோவை வெளியிட்டு அதிரவைத்தார்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் கோவையில் இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடந்தது. 691.51 கோடி ரூபாய் மதிப்பினாலான புதிய கட்டடங்கள் திறந்துவைத்த முதல்வர் 1328.95 கோடி ரூபாய் மதிப்பினாலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

விழாவில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, `எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா 28-வது மாவட்டமாக கோவையில் நடைபெறுகிறது. நிறைவுவிழா ஜனவரி மாதம் நடைபெற இருக்கிறது. கோவைக்குத் தேவையான என்ன திட்டங்களாக இருந்தாலும் கேட்டதுமே வழங்கும் முதல்வர் நமக்கு கிடைத்திருக்கிறார். இந்த விழா நடக்கக்கூடாது என்று மு.க.ஸ்டாலின் எவ்வளவோ போராடினார். தங்களுடைய சட்டமன்ற உறுப்பினரை வைத்து வழக்கு போட்டார். ஆனால், அவர்கள் எண்ணம் நிறைவேறவில்லை. இந்த ஆட்சியை எப்படியாவது கலைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் செயல்படுகின்றார். அது நடக்காது. மு.க.ஸ்டாலின் என்ன செய்தாலும் முதல்வராக முடியாது. ஆர்.கே.நகர் , உள்ளாட்சித் தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெறுவோம்' என்று முடித்தார்.

இறுதியாகப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என பேரறிஞர் அண்ணா சொன்னார். ஆனால் தி.மு கவுக்கு எதையும் தாங்காத இதயம்தான் இருக்கின்றது. ஜெயலலிதாவின் ஆன்மா எங்களுடன் இருக்கின்றது. ஆர்.கே.நகர் இடைதேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். இரட்டை இலைச் சின்னம் நமக்கு கிடைத்ததால் அது கிடைக்காதவர்கள் ஏதேதோ பேசி வருகின்றனர். அம்மாவின்  ஆன்மா  அவர்களை நிச்சயம் தண்டிக்கும். புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அமைச்சர்கள் விரைந்து, தேவையான பணிகளைச் செய்துவருகின்றனர். பாதிக்கப்பட்ட  இடங்கள் விரைவில் சரி செய்யப்படும். துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து வருகிறார். ஆனால், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தவறான தகவல்களை பரப்பிவருகிறார்'' என்றவர்,

`எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவில் மோதி இளைஞர் ரகுபதி இறக்கவில்லை. லாரி மோதிதான் அந்த இளைஞர்  இறந்து இருக்கின்றார். இருப்பினும் அந்த இளைஞரின் மரணம் வருத்தமளிக்கிறது. விபத்து நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துவிட்டோம். அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கு அதிகரிப்பதை தடுக்கவே ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது' என்று நிறுத்தியவர், `இப்போது,  நாங்கள் கட்-அவுட் வைக்க கூடாது என்று வழக்குபோடும் தி.மு.க செம்மொழி மாநாட்டில் இதே கோவையில் என்ன செய்தது தெரியுமா?' என்று ஓர் வீடியோ காட்சியை வெளியிட்டார். அதில் செம்மொழி மாநாட்டுக்கு தி.மு.க வைத்திருந்த அலங்கார வளைவு மற்றும் ஃப்ளெக்ஸ்களின் காட்சிகள் இருந்தன அந்த காட்சியை பார்த்ததும் கூட்டம் அதிர்ந்தது. 

`நீங்கள் கட்- அவுட் வைத்தீர்கள். நாங்களும் வைப்போம்' என்று வீடியோவின் மூலம் முதல்வர் சொல்லவருகிறாரா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!