வெளியிடப்பட்ட நேரம்: 02:45 (04/12/2017)

கடைசி தொடர்பு:10:44 (04/12/2017)

கரூர் நகராட்சியில் தம்பிதுரை திடீர் ஆய்வு!

 

கரூர் மாவட்டத்தில், பெரிய நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொள்ளும் தம்பிதுரை, திடீரென்று சாதாரணமாக ஆய்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

கரூர் நகராட்சி 26 மற்றும் 28-வது வார்டு பகுதிகளில், மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கள் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றதோடு, அடிப்படை வசதிகள்குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட 26 மற்றும் 28-வது பகுதிகளான உழவர் சந்தை, படிக்கட்டுத்துறை, மக்கள் பாதை, வஞ்சியம்மன் கோயில் தெரு, சித்தர் கோயில் தெரு மற்றும் இரட்டை வாய்க்கால் ஆகிய பகுதிகளில் மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் கு.கோவிந்தராஜ் தலைமையில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அடிப்படை வசதிகள்குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது  சாக்கடை, கழிப்பிடம், சாலைகள், குடிநீர் வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள், தேவைகள்குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், அப்பகுதி பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள், பல்வகைச் சான்றிதழ்கள் உட்பட பல்வேறு தேவைகள்குறித்து கோரிக்கை மனுக்களாகப் பெறப்பட்டு, உடன் மேல்நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது.
 

முன்னதாக, உழவர் சந்தை, அம்மா உணவகம், புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவக்கல்லூரிப் பகுதிகளை மூவரும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, வட்டாட்சியர் அருள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் காளியப்பன், நெடுஞ்செழியன், கிருஷ்ணன் உட்பட பலர் உடன் இருந்தனர்.