வெளியிடப்பட்ட நேரம்: 03:15 (04/12/2017)

கடைசி தொடர்பு:15:23 (28/06/2018)

`பயிற்சியும் முயற்சியும் இருந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்!' - ஆட்சியர் பேச்சு!

 

"பயிற்சியும் முயற்சியும் இருந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்" என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பை, மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கிவைத்து தெரிவித்தார். கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தொகுதி 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்காக விண்ணப்பித்தவர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தொடங்கிவைத்தார்.

இப்பயிற்சி வகுப்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது...
"எல்லோரும் விண்ணப்பிக்கிறார்கள் என்று நாமும் விண்ணப்பிக்கக்கூடாது. எதைச் செய்தாலும் குறிக்கோளுடன் செய்ய வேண்டும். நாம் எங்கே செல்கிறோம் என்பதை முதலில் திட்டமிட வேண்டும். திட்டத்துக்கு தகுந்தார்ப்போல பயிற்சி எடுக்க வேண்டும். பயிற்சியுடன் கடுமையான முயற்சியும் இருக்க வேண்டும். முயற்சிக்கும்போது, சிலசமயம் தோல்வியடைய நேரலாம். தோல்வியைக் கண்டு துவளாமல், விமர்சனங்களைக் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். விழுவது மீண்டும் எழுவதற்கே. வெற்றி என்பது ஒரு இலக்கு அல்ல. அது ஒரு தொடர் பயணம். அப்போதுதான் வெற்றி மேல் வெற்றி பெற முடியும். மாற்றங்களுக்குத் தகுந்தபடி தன்னை மாற்றிக்கொண்டு படிக்க வேண்டும். பயிற்சி, முயற்சி, தன்னம்பிக்கை, பொதுஅறிவு, சுயபரிசோதனை இருக்க வேண்டும். முதலில் படிக்க வேண்டும். அதிலிருந்து நாமாகவே கேள்விகளை உருவாக்க வேண்டும். அதன்மூலம் தன்னைத்தானே பரிசோதித்துக்கொள்ள வேண்டும். நல்ல சிந்தனையுடன் கடுமையாக உழைக்க வேண்டும். கஷ்டப்பட்டு படிக்காமல் இஷ்டப்பட்டு படித்தால் வெற்றி நிச்சயம். எண்ணச்சிதறல்கள் இல்லாமல் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும். இன்றைய பெரிய சாதனையாளர்கள் எல்லாம், கடந்த காலங்களில் பல தோல்விகளைச் சந்தித்தவர்கள். அதனால், தோல்வியைக் கண்டு துவலாமல், தோல்விக்கான காரணத்தைக் கண்டறிந்து மீண்டும் மீண்டும் முயற்சிசெய்து, வெற்றிபெற வாழ்த்துகிறேன்" என்றார்.