ஆம் ஆத்மி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு கடிதம்!

கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் ஒகி புயலால் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் மாநில செய்தித்தொடர்பாளர் திருஞானம், கடிதம் அனுப்பியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், "ஒகி புயலால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, நாகர்கோவில், கேரளா ஆகிய பகுதிகளிலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள், ஒகி புயலால் காணாமல் போயிருக்கிறார்கள். இதில் கொஞ்சம் பேர், கடலுக்குள் உயிருக்குப் போராடித் தப்பி வந்திருக்கிறார்கள். இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் கடலுக்குள் ஆங்காங்கேயுள்ள குட்டித் தீவுகளில்  ஒதுங்கியிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. அவர்களை மீட்க வேண்டுமானால், மத்திய அரசு கடற்படை, கப்பல் படை, ராணுவம் எல்லாம் கூட்டாக இணைந்து ஹெலிகாப்டர் போன்றவைகளை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். அதற்கு மாநில அரசும் துணை நிற்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் காணாமல்போன மீனவர்கள் மீட்க வேண்டும். அதே நேரத்தில், அவர்களின் குடும்பங்களுக்கு, அரசு நிவாரணம் கொடுக்க வேண்டும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்டு, தங்கள் உடமைகளையும் உயிர்களையும் இழந்து நிராயுதபாணியாக இருக்கும் மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இன்னும் பெரும்பாலான இடங்களில் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அங்கே இருந்தும் மீட்புப் பணிகள் காலதாமதம் ஆகிக்கொண்டிருக்கிறது. எனவே, உடனடியாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பியிருக்கிறோம். பாதுகாப்புத்துறை அமைச்சகத்தைத் தொடர்புகொண்டு, அதன் செயலாளரிடமும் இதுதொடர்பாக பேசியிருக்கிறோம்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!