காரைக்குடி நகராட்சியின் புதிய வரி விதிப்பால் வியாபாரிகள் போர்க்கொடி!

காரைக்குடி நகராட்சி நிர்வாகம், நகராட்சிக் கடைகள், தரை வாடகை, வீட்டு வரி போன்றவற்றுக்கு தாறுமாறாக வரிவசூல் செய்ய நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், வியாபாரிகள் மிரட்சியில் இருக்கிறார்கள்.

இது தொடர்பாக, காரைக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆதிஜெகன்னாதன் பேசும்போது...
காரைக்குடி நகராட்சிக்கு வருவாய் குறைந்துள்ளதைக் காரணம் காட்டி, நகராட்சிக்குச் சொந்தமான கட்டடங்களுக்கு வாடகை, வீடுகளுக்குரிய வரி பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. நகராட்சிக்கு நிரந்தர வருவாய் தரக்கூடிய தொழில் வரி வசூல் செய்வதில் நகராட்சி நிர்வாகம் அக்கறைகாட்டவில்லை. நகராட்சியில் உள்ள பல தனியார் பள்ளிகள், சுயநிதிக் கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், பெட்ரோல் விற்பனை  நிலையங்களில் தொழில் வரி வசூலிப்பதில்லை. அவர்களிடம் வசூலிக்க மறந்ததை நகராட்சி குத்தகைதாரர்களிடம் வசூலிக்க முடிவெடுத்து, வாடகையை நகராட்சி நிர்வாகம் உயர்த்தியுள்ளது. காரைக்குடி செக்காலை சாலையில் உள்ள அண்ணா தினசரி சந்தை, பழைய பேருந்து நிலையம் உட்பட பல இடங்களில் உள்ள நகராட்சிக் கடைகளுக்குப் பன்மடங்கு வாடகையை உயர்த்தியுள்ளது.  காரைக்குடியில், திங்கள்கிழமைகளில் அரியக்குடி சாலையில் பழைய சந்தை, வியாழக்கிழமைகளில் கழனிவாசல், சனிக்கிழமைகளில் வைரவபுரம், நெசவாளர் காலனியில் வாரச்சந்தை நடைபெறுகிறது. பின்பு  கல்லூரி சாலையில் ராஜீவ் காந்தி சிலை முன்பும், கிருஷ்ணன் கோயில் அருகிலும், கழனிவாசல் சாலை ஆகிய இடங்களில் தினசரி சந்தையும் நடைபெறுகிறது. இதனால், செக்காலை சாலையில் உள்ள நகராட்சிக் கடைக்கு காய்கறி வாங்க வருவோரின் எண்ணிக்கையும் குறைந்துவருகிறது. இதில், வாடகை ரூ.1357 என இருந்ததை ரூ.5748 என உயர்த்தியுள்ளது. மேலும், வாடகை நிலுவையைக் கடந்த 1.7.2016 முதல் நடப்பு மாதம் வரை செலுத்துமாறும் நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாடகை உயர்வை  நகராட்சி நிர்வாகம் மறு பரிசீலனை செய்யவேண்டும். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாத காலத்தில், வாடகைக் கட்டணத்தை உயர்த்துவதை கைவிட வேண்டும். மேலும், உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின் தேர்வான உள்ளாட்சிப் பிரதிநிதிகள், வியாபாரிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து, வாடகை கட்டணத்தை உயர்த்துவதுகுறித்து ஆலோசிக்க வேண்டும்'' என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாக ஆணையரை மதுரையில் சந்தித்து மனு அளிக்க இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!