வெளியிடப்பட்ட நேரம்: 05:15 (04/12/2017)

கடைசி தொடர்பு:12:38 (04/12/2017)

`ஒகி புயலில் சிக்கி இறந்த மீனவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வேண்டும்' – வசந்தகுமார் எம்.எல்.ஏ.

’’கன்னியாகுமரி கடல் பகுதியில் மீன்பிடிக்கும்போது, ஒகி புயலின் தாக்கத்தால் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும்’’ என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் வசந்தகுமார் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். 

vasanthakumar mla press meet

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மீனவர்களுக்கு ஒகி புயலின் தாக்கம்குறித்த முன்னறிவிப்பு வந்தவுடன் துரிதமாகச் செயல்பட்டிருந்தால், மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றிருக்க மாட்டார்கள்.  ஒக்கி புயல் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற முறையான தகவல் மீனவர்களுக்குக் கிடைக்கவில்லை. முறையான தகவல் கிடைத்திருந்தால் நாங்கள் விரைவாக கரை  திரும்பியிருப்போம் அல்லது கடலுக்குள் சென்றிருக்க மாட்டோம் எனக் கூறுகிறார்கள் மீனவர்கள். அவர்கள் சொல்வதுபோல முறையான முன்னறிவிப்பு செய்திருந்தால், மீனவர்கள் கடலுக்குள் சென்றிருக்க மாட்டார்கள்.  

 மீனவர்கள்  எந்தப் பகுதியில்  மீன்பிடித்துக்கொண்டிருந்தாலும் அந்தப்  பகுதியில்  வானிலை ஆராய்ச்சி மையத்தின் தகவலைக் கொண்டு சேர்ப்பதற்காக நாசா விஞ்ஞானிகளிடம் மத்திய அரசு தொடர்புகொண்டு, அதற்குறிய கருவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ஒகி புயலில் சிக்கித் தவித்த மீனவர்களை மீட்க, கடலோரக்காவல்படை, போர்க்கப்பல்கள்  உள்ளிட்ட 111 கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள்மூலம் தேடும் பணி தீவரமாக நடந்துவருகிறது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். ஆனால், கப்பலையோ, ஹெலிகாப்டரையோ மக்கள் யாரும் பார்க்கவில்லை. ஒகி புயலில் சிக்கி இறந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வேண்டுமென்று மீனவ மக்கள் கேட்கிறார்கள். ஒருவரை வைத்துதான் குடும்பமே வாழ்ந்துகொண்டிருக்கிறது. எனவே, அந்த நிவாரணத்தொகையை மத்திய, மாநில அரசுகள் வழங்கிட வேண்டும்.  

கன்னியாகுமரி மாவட்ட புயல் நிவாரணத் தொகையாக ரூ.25 கோடி ஒதுக்கியிருப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால், மத்திய அரசு எதுவும் அறிவிக்கவில்லை. மாநில அரசைவிட மத்திய அரசு அதிவிரைவாகச் செயல்பட்டு நடவடிக்கை எடுத்து, மக்களைக் காப்பாற்ற வேண்டும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க