வெளியிடப்பட்ட நேரம்: 06:20 (04/12/2017)

கடைசி தொடர்பு:08:48 (04/12/2017)

கடந்த 15 ஆண்டுகளாக காவிரித்தண்ணீர் எட்டிப்பார்க்காமல் வரண்டுகிடக்கும் பெரியகுளம்... கலங்கும் விவசாயிகள்!

வறண்டுகிடக்கும் தங்கள் ஊர் குளம் ஒன்றைப் பார்த்துக் கண்ணீர் வடிக்கிறார்கள் உழவர்கள். புதிதாகப் பார்ப்பவர்கள், கிராமத்து இளைஞர்கள் மாலை நேரங்களில் விளையாடும் திடல் என்றே கருதுவார்கள். அந்த அளவுக்கு குளம் இருந்ததற்கான அடையாளம் மாறிவிட்டது. அதன் பெயரே பெரியகுளம். தன் பெயருக்கு ஏற்றவாறு பரந்துவிரிந்துகிடக்கிறது.


 

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே இருக்கிறது குளந்திரான்பட்டு ஊராட்சி. இந்தப் பகுதியில், சுமார் 200 ஹெக்டேர் விவசாய நிலத்துக்குப் பாசனக்குளமாகப் பல காலமாக இருந்துவந்தது, இந்தப் பெரியகுளம்தான். இந்தப் பகுதி விவசாயப் பெருமக்களுக்கு தாய்ப்பாலாகத்  தண்ணீர்  சுரந்துகொண்டிருந்த இந்தப் பெரிய குளம், கடந்த 15 வருடங்களாக எருக்கன் செடிகளும் வேலிக்கருவை மரங்களும் முளைத்ததால், வறண்டுகிடக்கிறது.

இந்தப் பகுதி விவசாயிகளிடம் பேசினால், குளம் தங்களது வாழ்வோடு பின்னிப் பிணைந்திருந்த அநேக நினைவுகளை, ஆர்வம் பொங்கும் குரலில் சொல்ல ஆரம்பித்து, கண்களில் எட்டிப்பார்க்கும் நீர்த்திவலைகளுடன் முடிக்கிறார்கள். இந்தக் குளத்துக்குத் தண்ணீர் எனும் ரத்தத்தைப் பாய்ச்சும் நரம்புகளாக இருக்கும் வரத்துக்கால்வாய்கள், வரலாற்றுப் பின்னணிகொண்டவை.

ஆங்கிலேயர் காலத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செல்லம்பட்டியில் பாயும் கல்லணைக்  கால்வாயிலிருந்து, காவிரித்தண்ணீரை இந்தப் பெரியகுளத்துக்குக் கொண்டு சேர்ப்பதற்காக, நேர்த்தியாக வெட்டப்பட்டதுதான் இந்தக் கிளைக் கால்வாய்கள். இதன்மூலம் வரும் தண்ணீரை தனக்குள்ளாக சேமித்து, 200 ஹெக்டேர்  விவசாய பாசனத்துக்காக தண்ணீரைக் கொடுத்துக்கொண்டிருந்ததுதான் இந்தப் பெரியகுளம். அந்தக் கிளை வாய்க்கால்களும் தற்போது தூர்ந்துவிட்டன.

"தஞ்சாவூர் மாவட்டம் செல்லம்பட்டி அருகே பிரியும் காவிரி உழவர் வாய்க்கால் தண்ணீரைத் திறந்துவிட்டால், இந்தப் பெரிய குளத்துக்கு வந்துதான் முடியும். ஆனால், கடந்த 15 வருடங்களாக அரசு முறைவைத்துத் திறந்துவிடும் கொஞ்சத்  தண்ணீரையும் இந்தப் பகுதியில் உள்ள வசதிபடைத்த நிலக்கிழார்கள், வாய்காலின் வரத்துவழியை அடைத்து, வரும் தண்ணீரைத் தங்கள் சொந்த வயல்களுக்கு  திருப்பிவிட்டுவிடுகிறார்கள். இதனால் பொதுப்பணித்துறை திறந்துவிடும் தண்ணீர், பெரியகுளத்துக்கு வருவதே இல்லை" என்பது இப்பகுதியில் உள்ள விவசாயிகளின் ஒட்டுமொத்த குற்றச்சாட்டாக இருக்கிறது.

"இந்தக் குளத்துப் பாசனத்தை நம்பி, இருபோகமோ, ஒருபோகமோ சாகுபடி செய்துவந்த விவசாயிகளில் சிலர், வசதிபடைத்தவர்கள். ஒரு காலகட்டத்துக்குப் பிறகு, இந்தக் குளத்தை நம்பி பயனில்லை என்று சுதாரித்து, போர்வெல் போட்டு விவசாயம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.  நாங்கள் இன்னும் இந்தக் குளத்தை நம்பியே நிலத்தை தரிசாகப் போட்டுவிட்டுக் காத்துக்கிடக்கிறோம். இது சம்பந்தமாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் பேசினோம், 'குளத்துக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்களைத் தூர் வாரிவிட்டோம். தண்ணீர் வரும்' என்று வருடா வருடம் சொல்கிறார்கள். ஆனால் இன்னும் தண்ணீர் வந்தபாடில்லை'' என்பதும் இந்தப் பகுதி விவசாயிகளின் குமைச்சலாக இருக்கிறது.