வெளியிடப்பட்ட நேரம்: 05:31 (04/12/2017)

கடைசி தொடர்பு:08:15 (04/12/2017)

பாரம்பர்ய நெல் சாகுபடியில் சாதித்த 10 உழவர்கள்! - மாற்றத்தின் முகமாக சேந்தன்குடி

'ஆரம்பம் அற்பமாக இருந்தாலும் முடிவு சம்பூரணமாக இருக்கும்' என்பதை நிரூபித்துவிட்டார்கள், சேந்தன்குடியைச் சேர்ந்த 10  விவசாயிகள். இந்த 10 உழவர்களும் ஒன்றுசேர்ந்து, தங்கள் நிலங்களில் பாரம்பர்ய நெல் சாகுபடி செய்து, இன்றைக்கு அமோக விளைச்சலைக் கண்டிருக்கிறார்கள். இதைக்கண்ட உள்ளூரைச் சேர்ந்த மற்ற விவசாயிகள் வியந்துபோகிறார்கள்.

மாப்பிள்ளைச் சம்பா, கிச்சிலிச் சம்பா, சீரகச் சம்பா உள்ளிட்ட 10 வகையான நெல் வகைகளை இந்தப் 10 பேரும் தனித்தனியாகப் பயிரிட்டு சாதித்திருக்கிறார்கள். இந்த முயற்சியில், கடந்த இரண்டு வருடங்களாக ஈடுபட்டுவருகின்றனர். கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் அமோக விளைச்சலை அள்ளியிருக்கிறார்கள்.


 

இதுகுறித்து நம்மிடம் பேசிய சீராளன் , "நான் இந்த வருடம் கிச்சலிச் சம்பா பயிரிட்டிருக்கிறேன். போன வருடம் மாப்பிள்ளைச் சம்பா பயிரிட்டேன். இரண்டு வருடங்களும் நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக மகசூல் கிடைத்திருக்கிறது. இந்த முயற்சியில் கடந்த ஆண்டு  முதல் முறையாக ஈடுபட்டபோது, எங்களுக்குத் தெரிந்தவர்கள் எல்லாருமே, 'இது போகாத ஊருக்கு வழி தேடுவது மாதிரி. பாரம்பர்ய நெல் சாகுபடி பண்றதெல்லாம் பேச்சுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். ஆனா, நம்ம மண்ணுல நடைமுறைப்படுத்துவது சாத்தியம் இல்லை'ன்னாங்க. அவர்கள் அப்படிப் பயந்ததுக்கும் காரணம் இல்லாமல் இல்லை. கிட்டத்தட்ட40 வருடங்களுக்கு மேலாக நிலங்களில் உரத்தைப் போட்டு, விவசாயம் பார்த்ததால் நிலம் மலடாகிவிட்டது. அப்படி மாறிவிட்ட நிலத்தில் வெள்ளாமை எடுப்பது காரியமாகாத காரியமாக அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக, விளைச்சல் கைகூடி வந்திருப்பதில் அவர்களுக்கு ஆச்சர்யம். எங்களுக்குப் பெருமை" என்றார்.

அந்த பத்துப் பேர்களில் மற்றொருவரான துரைபாண்டியன், தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் இந்த வருடம் மாப்பிள்ளைச் சம்பா பயிரிட்டிருக்கிறார். பயிர் நடுவே நின்றுகொண்டு, நம்மிடம் பேசினார். "இதற்கு ஆரம்பகட்ட வேலை என்பது, மலடாய் மாறிவிட்ட நிலத்துக்கு உயிர் கூட்டுவதுதான். அதை மட்டும் முறைப்படி செய்துவிட்டால், ஆயிரம் வகையான பாரம்பர்ய நெல்களைக்கொண்டு அமோகமான விளைச்சலை சுலபமாக ஈட்டலாம். இரண்டு வருடங்களாக நாங்கள் செய்துவரும் இந்த முயற்சியில் வெற்றி பெற்றதால், இப்போது நிறைய விவசாயிகள், அவர்களின் நிலத்தில் பாரம்பர்ய நெல் சாகுபடி செய்ய முன்வந்திருக்கிறார்கள். பத்துப் பேர்களுடன் ஆரம்பித்த எங்களது இந்த முயற்சி, அடுத்த வருடம் 25 பேர்களுடன் விரிவடையும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.