வெளியிடப்பட்ட நேரம்: 07:15 (04/12/2017)

கடைசி தொடர்பு:07:57 (04/12/2017)

கந்தர்வகோட்டையில் செயல்படாமல் பூட்டியேகிடக்கும் திடக்கழிவு மேலாண்மைக் கூடம்!

"இந்தக் கூடம் கட்டியதிலிருந்து பூட்டியேதான் இருக்கிறது. திடக்கழிவிலிருந்து உரம் தயாரிக்கப்போவதாக அதிகாரிகள் அறிவித்தார்கள். ஆனால், அப்படி ஏதும் இன்றுவரை நடந்ததாகத் தெரியவில்லை. இதற்காக, மூட்டை மூட்டையாகச் சேகரிக்கப்பட்ட குப்பைகள் மட்டும் இங்கு குவிந்துக்கிடக்கின்றன" என்று ஆரம்பித்தார்கள் நடுப்பட்டி கிராம மக்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், ரெகுநாதபுரம் அருகே இருக்கிறது நடுப்பட்டி கிராமம். இது, கந்தர்வகோட்டை ஊராட்சியைச் சேர்ந்தது. இந்த ஊருக்குள் நுழையும் பிரதான சாலையை ஒட்டி இருக்கிறது வாத்தியார் குளம். இதன் கரையோரத்தில்தான் அந்தச் சிறிய கூடம் அமைந்துள்ளது. ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டம்  மூலமாக, குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாகத் தரம் பிரிப்பதே இதன் நோக்கம்.

மக்கும் குப்பைகளை மறுசுழற்சிசெய்து உரமாக மாற்றுவதற்கும், மக்காத குப்பைகளைக்கொண்டு மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும், இந்தப் பகுதியில் இந்தத் திட்டத்தை ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் அமல்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், அரசு அறிவிக்கும் அனைத்து திட்டங்களும், தொடங்குவதில் இருக்கும் வேகத்தை அதைச் செயல்படுத்துவதில் காட்டுவதில்லை.

அந்தப் பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் பேச்சுக்கொடுத்தோம். "இந்தக் குப்பைகள் இங்கு குவிந்துகிடப்பதால், தனிப்பட்ட முறையில் எனக்கு பாதிப்புதான். எப்படினா, நான் மேய்ச்சலுக்கு ஓட்டிவரும் பசு மாடுகள் பசும் புற்களை மேயாமல், இந்தக் குப்பைகள் பக்கமாக தினமும் மேய வருது. அந்தக் குப்பைகளில் அப்படி என்னதான் ருசியை என் மாடுங்க கண்டுச்சோ தெரியலை. தினமும் இந்தப் பக்கமே வருதுங்க. அதுகளை குப்பைகளைத் தின்னாம பாதுகாப்பதே எனக்கு பெரும்பாடாக இருக்குது" என்றார்.


 கந்தர்வகோட்டை ஊராட்சியைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை அதிகாரியைத் தொடர்புகொண்டு பேசியபோது, "நடுப்பட்டி, அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சேரும் குப்பைகளைக்கொண்டு, இந்தத் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் கொண்டுவரப்பட்டது. குப்பைகளைத் தரம் பிரிக்கும் பணிக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆட்கள் கிடைக்காததால், அந்தப் பணி தற்காலிகமாகத் தாமதமாகிறது. மிக விரைவில் அது செயல்படுத்தப்படும்" என்றார்.