அரசு மருத்துவமனைக்கே ரத்ததானம் தந்த இளைஞர்கள்... இது பட்டுக்கோட்டை பரவசம்!

பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் உள்ள ரத்த சேமிப்பு வங்கியில் ரத்தவகை இருப்பு குறைந்ததை அறிந்த 25 இளைஞர்கள், தாமாகவே முன்வந்து ரத்ததானம் தந்திருக்கிறார்கள் என்ற  செய்தியறிந்து அதுகுறித்து விசாரித்தோம்.

இரண்டு வாரங்களுக்கு முன், பாலமுருகன் என்பவருக்கு பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனையிலிருந்து போன் வந்திருக்கிறது. அதில் பேசியவர், பாலமுருகனுக்கு நன்கு அறிமுகமான நியூட்டன் என்பவர். மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர். அங்குள்ள ரத்த சேமிப்பு வங்கியில் ரத்த வகைகளின் இருப்பு வெகுவாகக் குறைந்திருப்பதை எடுத்துச்சொல்லி, யூனிட் இருப்பு அதிகரிக்க உதவும்படி கோரிக்கை வைத்திருக்கிறார்.

உடனடியாக செயலில் இறங்கிய பாலமுருகன், 25 இளைஞர்களை ஒருங்கிணைத்து, தானும் சேர்ந்து அரசு பொது மருத்துவமனைக்குச் சென்று ரத்ததானம் செய்துள்ளனர்.

சரி, யார் இந்த பாலமுருகன்..? பட்டுக்கோட்டை நகரில் மிகத் தீவிரமாக இயங்கிவரும் சமூக செயற்பாட்டாளர். அவரிடம் பேசினோம், ``அப்போதும்கூட நான்கு இளைஞர்களைச் சேர்த்துக்கொண்டு, சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக, நகரில் ஆங்காங்கே பள்ளமாக இருக்கும் பிரதான சாலைகளில் தார் கலந்த சரளைக்கற்களைப் போட்டு, அவற்றை செப்பனிட்டுக்கொண்டிருந்தார். 'அடிப்படையில் நான் புகைப்படக் கலைஞன். கேமராவைத் தூக்கிக்கொண்டு, காடு, மலை என்று மாதக்கணக்கில் சுற்றுவேன். விலங்குகளையும் பறவைகளையும் பார்க்கும்போது, அவற்றின் வாழ்க்கை முறை இயற்கையுடன் ஒத்திசைந்து, எவ்வளவு இயல்பாக இருக்கின்றன என்பது பற்றிய ஆச்சர்யம் எழும். நாம் எந்த அளவுக்கு இயற்கைக்கு விரோதமான செயல்களைச் செய்துகொண்டு, அது பற்றிய குற்ற உணர்ச்சியே இல்லாமல் இருக்கிறோம் என்ற யோசனை வரும். அப்போதுதான் நாம் வாழும் பகுதியிலாவது, குறைந்தபட்ச மனிதநலன் சார்ந்த பொதுச் சேவைகள் பண்ணவேண்டும் என்ற சிந்தனை ஏற்பட்டது. பட்டுக்கோட்டை எனது ஊர். ஆகவே, இந்தப் பகுதியின் நலன் சார்ந்த சமூகப் பணிகளோடு, என்னை இணைத்துக்கொண்டேன். என்னோடு இந்த இளைஞர்களும் கைகோத்து பொதுச் சேவை செய்துவருகிறோம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!